தேசிய செய்திகள்

தமிழர்கள் சென்ற 2 வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன - அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி

வெள்ளத்தில் சிக்கி மாயமான தமிழர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

புதுடெல்லி,

நேபாள வெள்ளத்தில் சிக்கித்தவித்த 21 தமிழர்கள் தற்போது பாதுகாப்பாக டெல்லி அழைத்துவரப்பட்டுள்ளனர். அவர்களிடம் தமிழர்கள் அமைச்சர்கள் நலம் விசாரித்தனர். 21 தமிழர்களும் இரவு 8 மணியளவில் சென்னை வந்தடைய உள்ளனர்.

இந்த நிலையில், 21 தமிழர்களையும் சந்தித்த பின்னர் அமைச்சர் ராஜ்மோகன் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

”நேபாளத்துக்குஆன்மிக யாத்திரையாக 3 வாகனங்களில் சென்ற தமிழர்கள் வெள்ளத்தில் சிக்கினர். தமிழர்கள் சென்ற 3 வாகனங்களில் முன்னும், பின்னும் வந்துகொண்டிருந்த 2 வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன. நடுவில் சென்ற வாகனத்தில் இருந்த 21 தமிழர்கள்தான் தற்போது உயிர் தப்பினர். அவர்கள் காத்மண்டுவில் இருந்து தற்போது டெல்லி அழைத்துவரப்பட்டுள்ளனர்.

கண்ணெதிரே தங்களுடன் வந்தவர்கள் பெருவெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட அதிர்ச்சியில் இருந்து அவர்கள் இன்னும் மீளவில்லை. மீட்கப்பட்ட தமிழர்கள் வெள்ளத்தில் தங்கள் பாஸ்போர்டுகளை தவறவிட்டுள்ளனர்.

பெருவெள்ளத்தில் சிக்கி மாயமான தமிழர்களை மீட்கும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். வெளியுறவுத்துறை உட்பட மீட்பு நடவடிக்கைகளுக்கு தேவையான துறைகளுடன் நாங்கள் தொடர்பில் உள்ளோம்.”

இவ்வாறு அவர் பேசினார்.