தேசிய செய்திகள்

மேற்குவங்காளத்தில் பொதுசிவில் சட்டம் அமல்படுத்தப்படும் ; முதல்-மந்திரி சுவேந்து அதிகாரி

மேற்குவங்காளத்தில் பாஜக ஆட்சி அமைத்துள்ளது.

கொல்கத்தா,

இந்தியாவில் மதத்தின் அடிப்படையில் சிவில் சட்டங்கள் உள்ளன. திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு, சொத்துரிமை உள்ளிட்ட பல்வேறு தனி நபர் உரிமைகள் தொடர்பாக அந்தந்த நபர்களின் மதத்திற்கு ஏற்ப சிவில் சட்டங்கள் உள்ளன. தனி நபர் தான் பின்பற்றும் மதத்திற்கு ஏற்றார்போல் சிவில் சட்டங்கள் உள்ளன.

அதேவேளை, நாட்டில் உள்ள அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதேபோல், பொது சிவில் சட்டத்திற்கு பலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

மேற்குவங்காளத்தில் பொதுசிவில் சட்டம்

இதனிடையே, மேற்குவங்காளத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக அபார வெற்றிபெற்றது. அம்மாநில முதல்-மந்திரியாக சுவேந்து அதிகாரி பொறுப்பேற்றுள்ளார். முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ள சுவேந்தி அதிகாரி தலைமையிலான அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், மேற்குவங்காளத்தில் பொதுசிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று முதல்-மந்திரி சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார். அனைத்து சட்ட விதிகளும் பின்பற்றப்பட்டு அசாம், குஜராத் போன்று மேற்கு வங்காளத்திலும் பொதுசிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.