கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

இந்தியாவில் குழந்தை இறப்பு விகிதம் குறைவு: ஐ.நா. பாராட்டு

இந்தியாவில் குழந்தை இறப்பு விகிதம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் அமைப்பு வெளியிட்ட அறிக்கை கவனம் ஈர்த்துள்ளது.

புதுடெல்லி,

குழந்தை இறப்பு விகிதத்தை குறைப்பதில் உலகளாவிய முன்னேற்றத்திற்கு இந்தியா ஒரு முக்கியப் பங்களிப்பாளராக உருவெடுத்துள்ளது என சமீபத்திய ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை தெரிவிக்கிறது.

குழந்தை இறப்பு மதிப்பீட்டுக்கான ஐ.நா. இடை-முகமைக் குழுவின் (UNIGME) அறிக்கையின்படி, இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம் 1990-ல் 127 ஆக இருந்தது 2024-ல் 26.6 ஆக குறைந்து, சுமார் 79 சதவீதம் வீழ்ச்சி பதிவாகி உள்ளது. இதன்படி ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம், 2000-ஆம் ஆண்டில் 1,000 உயிருள்ள பிறப்புகளுக்கு 92 இறப்புகளாக இருந்த நிலையில் இருந்து, 2024-ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 32 ஆக கணிசமாகக் குறைந்துள்ளது. இது குழந்தைகளின் சுகாதாரப் பலன்களில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கிறது.

குழந்தை இறப்பு விகிதம் குறைவதற்கு பொதுமக்கள் சுகாதார முதலீடுகள், தடுப்பூசி திட்டங்கள், புதிதாக பிறந்த குழந்தைகளுக்கான சிகிச்சை வசதிகள் போன்ற நடவடிக்கைகள் முக்கிய காரணமாக உள்ளன. தேசிய முன்னுரிமைகளைக் குழந்தைகளின் மேம்பட்ட நலன்களாக மாற்றுவதில் தெளிவான கவனம் செலுத்தி, மாநில அரசுகளுடன் இணைந்து இந்திய அரசு வழிநடத்தும் ஒருங்கிணைந்த, தரநிலைகளை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறையின் வலிமையை இது பிரதிபலிக்கிறது என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

மேலும், இந்தியா போன்ற பெரிய மக்கள் தொகையுள்ள நாடுகளில் நீடித்த முயற்சிகள் மூலம் குழந்தைகளின் இறப்பை கணிசமாகக் குறைக்க முடியும் என்பதற்கான முன்னுதாரணமாக இந்த முன்னேற்றம் பார்க்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.