தேசிய செய்திகள்

ஏ.ஐ. தாக்க உச்சி மாநாட்டில் பங்கேற்க ஐ.நா. பொது செயலாளர் இந்தியா வருகை

அன்டோனியோவின் வருகை, ஐ.நா. அமைப்புடனான இந்தியாவின் நட்புறவை இன்னும் பலப்படுத்தும் என்று தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி கடந்த 16-ந்தேதி தொடங்கி வைத்த ஏ.ஐ. தாக்க உச்சி மாநாடுக்கான கண்காட்சி 20-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், டெல்லியில் ஏ.ஐ. தாக்க உச்சி மாநாட்டை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்க உள்ளார்.

பிரதமர் மோடியின் அழைப்பையேற்று பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான், ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் அபுதாபி இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் ஜயீத் அல் நாஹியான், சுலோவேக்கியா நாட்டு ஜனாதிபதி பீட்டர் பெல்லேகிரினி, இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசநாயகா உள்ளிட்ட 20 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு வருகை தருகின்றனர்.

உலகளாவிய தெற்கு பிராந்தியத்தில் நடைபெற கூடிய முதல் உச்சி மாநாடு என்ற அளவில் அது பெருமையை பெற்றுள்ளது. இதனை முன்னிட்டு, ஏ.ஐ. தாக்க உச்சி மாநாட்டில் பங்கேற்க ஐ.நா. பொது செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் இந்தியாவுக்கு இன்று வருகை தந்துள்ளார்.

அவரை கார்ப்பரேட் விவகாரங்கள் மற்றும் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறைக்கான மத்திய இணை மந்திரி ஹர்ஷ் மல்கோத்ரா நேரில் சென்று வரவேற்றார்.

இதனை தன்னுடைய எக்ஸ் சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ள மத்திய வெளிவிவகாரங்கள் அமைச்சக செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால், டெல்லியில் ஏ.ஐ. தாக்க உச்சி மாநாட்டில் பங்கேற்க வருகை தந்துள்ள ஐ.நா. பொது செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ்சை இனிதே வரவேற்கிறோம். அன்டோனியோவின் வருகை, ஐ.நா. அமைப்புடனான இந்தியாவின் நட்புறவை இன்னும் பலப்படுத்தும் என்று தெரிவித்து உள்ளார்.