ஜபல்பூர்,
மத்திய பிரதேச மாநிலத்தின் ஜபல்பூர் நகரைச் சேர்ந்தவர் குட்டு என்கிற ராஜா விஸ்வகர்மா வயது (60). கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இவர், 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார். விசாரணைக்குப் பிறகு, ஜபல்பூரில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
விஸ்வகர்மா கடந்த இரண்டு ஆண்டுகளாக நீரிழிவு மற்றும் கல்லீரல் நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக சிறை கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் உள்ள மருத்துவ வார்டில் சிகிச்சை பெற்று வந்தார்,
இந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு இரண்டாவது தளத்தில் இருந்து தரைத் தளத்திற்கு சென்று காலை உணவை சாப்பிட்டார். அங்கு இருந்து கிளம்பி மருத்துவ வார்டுக்கு திரும்பிய அவர், கழிவறைக்கு சென்றுள்ளார். அங்கு தனது துண்டால் தூக்கு போட்டுக் கொண்டார்.
இதுபற்றி தகவல் கிடைத்த உடன் சிறை மருத்துவர்கள் அங்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் விஸ்வகர்மா இறந்துவிட்டார். அவரது மரணம் குறித்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்ப பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் எனவும், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு உறவினர்களிடம் தொலைபேசியில் பேசியதாகவும் சிறை சூப்பிரெண்டு அகிலேஷ் தோமர் தெரிவித்தார். இந்த தற்கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.