போபால்,
இந்தியாவில் மதத்தின் அடிப்படையில் சிவில் சட்டங்கள் உள்ளன. திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு, சொத்துரிமை உள்ளிட்ட பல்வேறு தனி நபர் உரிமைகள் தொடர்பாக அந்தந்த நபர்களின் மதத்திற்கு ஏற்ப சிவில் சட்டங்கள் உள்ளன. தனி நபர் தான் பின்பற்றும் மதத்திற்கு ஏற்றார்போல் சிவில் சட்டங்கள் உள்ளன.
அதேவேளை, நாட்டில் உள்ள அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதேபோல், பொது சிவில் சட்டத்திற்கு பலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, கோவா, உத்தரகாண்ட் ஆகிய 2 மாநிலங்களில் பொது சிவில் சட்டம் அமலில் உள்ளது. அதேவேளை, குஜராத், அசாம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த சட்டசபையில் மசோதாவை நிறைவேற்றியுள்ளன.
இந்நிலையில், மத்தியபிரதேசத்தில் பொது சிவில் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி மோகன் தெரிவித்துள்ளார். சுதந்திர தின விழாவில் பங்கேற்ற முதல்-மந்திரி மோகன், இந்திய அரசியலமைப்பின் அடிப்படி உணர்வுக்கு ஏற்ப வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை அரசு எடுக்க உள்ளது. மத்திய பிரதேசத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்த உள்ளோம்’ என்றார்.