தேசிய செய்திகள்

இன்று மத்திய பட்ஜெட்: தமிழ்நாட்டுக்கு புதிய அறிவிப்புகள் வெளியாகுமா?

ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வரலாற்றிலேயே இதுவே முதல் முறை ஆகும்.

புதுடெல்லி,

2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தாக்கல் செய்யப்படுகிறது. இதில் புதிய அறிவிப்புகள் வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு முதல் பட்ஜெட் 1947-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதன்பிறகு பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கமாக இருந்தது. இது 2016-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. 2017-ம் ஆண்டு இந்த தினத்தை பிப்ரவரி 1-ந் தேதி என மத்திய அரசு மாற்றியது.

அதன்படி அடுத்த நிதியாண்டுக்கான (2026-27) பட்ஜெட் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தாக்கல் செய்யப்படுகிறது. பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் இயங்காது. ஆனால் இந்த பட்ஜெட்டுக்காக இன்றைய தினம் நாடாளுமன்றம் செயல்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வரலாற்றிலேயே இதுவே முதல் முறை.

1999-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளான 28-ந் தேதி ஞாயிற்றுக்கிழமையாக இருந்தது. இதனால் பட்ஜெட் தாக்கலை ஒரு நாள் முன்பாக சனிக்கிழமைக்கு மாற்றினார்கள். அப்போது வாஜ்பாய் பிரதமராக இருந்தார்.

ஆனால் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் முறைப்படி பிப்ரவரி 1-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று அரசு உறுதியாக இருப்பதன் அடிப்படையில் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது.

பட்ஜெட்டை காலை 11 மணிக்கு தாக்கல் செய்கிற வழக்கமும், 1999-ம் ஆண்டுதான் தொடங்கியது. அதற்கு முன்புவரை பட்ஜெட்டை மாலை 5 மணிக்கு தாக்கல் செய்தனர்.

மேலும் 2016-ம் ஆண்டுவரை ரெயில்வே பட்ஜெட்டை தனியாக தாக்கல் செய்யும் வழக்கம் இருந்தது. அப்போது ரெயில்வே பட்ஜெட்டுக்கு பலத்த எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் அதன்பிறகு பொது பட்ஜெட்டோடு அது இணைக்கப்பட்டு விட்டது.

இது மட்டுமின்றி, 2018-ம் ஆண்டுவரை சூட்கேசில் எடுத்துச் செல்லப்பட்ட பட்ஜெட் ஆவணங்கள், 2019-ம் ஆண்டில் இருந்து சிவப்பு நிற கோப்பில் எடுத்துச் செல்லப்பட்டு வந்தது. இதுவே 2021-ம் ஆண்டு முதல் டிஜிட்டல் ஆவணமாக (டேப்லெட்) சிவப்பு நிற கோப்புக்குள் வைத்து கொண்டு செல்லப்படுகிறது.

இந்த ஆண்டு தாக்கல் செய்யப்படுகிற பட்ஜெட், சுதந்திர இந்தியாவின் 88-வது பட்ஜெட் ஆகும். இது நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு 9-வது பட்ஜெட் என்பதும் குறிப்பிடத்தக்கது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு புதிய அறிவிப்புகள் வெளியாகும் என அனைத்து தரப்பினரிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல்: ‘இலவசம்’ வாக்குறுதிகளுக்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

பிரதமர் மோடி இன்று வரும் நிலையில் சீக்கிய அமைப்புக்கு வெடிகுண்டு மிரட்டல்

இன்று பட்ஜெட் தாக்கல்: மாநில அரசுகள் பதற்றத்துடன் காத்திருக்கின்றன - காங்கிரஸ்

ஐ.ஜி. அந்தஸ்து பெற 2 ஆண்டுகள் மத்திய பணி கட்டாயம் - மத்திய அரசு உத்தரவு

வாக்கு வங்கிக்காக ஊடுருவல்காரர்களுக்கு மம்தா அரசு அடைக்கலம் அளிக்கிறது - அமித்ஷா குற்றச்சாட்டு