தேசிய செய்திகள்

மத்திய மந்திரி - ராகுல் காந்தி நேருக்கு நேர் வாக்குவாதம்: துரோகி, எதிரி என விமர்சித்ததால் பரபரப்பு

மத்திய இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டுவுக்கும் ராகுல் காந்திக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

புதுடெல்லி,

பாராளுமன்ற வளாகத்தில் இன்று இடைநீக்கம் செய்யப்பட்ட 8 எம்.பி.க்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அவர் சிறிது நேரம் அந்த ஆர்ப்பாட்டத்தில் உடன் இருந்தார்.

அப்போது மத்திய இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு அந்தப் பகுதியை கடந்தார். இதைப் பார்த்த ராகுல் காந்தி, “இதோ ஒரு துரோகி. பக்கத்திலேயே செல்கிறார். அந்த முகத்தை பாருங்கள்” என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து, “வணக்கம் சகோதரரே, எனது துரோகி நண்பரே. கவலைப்படாதீர்கள். நீங்கள் மீண்டும் காங்கிரசுக்கு வருவீர்கள்” என்று ராகுல் காந்தி கூறியபடி அவருடன் கை குலுக்க முயன்றார். அதற்கு பதிலளித்த மத்திய இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு, “நாட்டின் எதிரி” என்று கூறியபடி ராகுல் காந்தியுடன் கை குலுக்க மறுத்துவிட்டார்.

இருவரும் கடுமையான வார்த்தைகளை பரிமாறிக்கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.