தேசிய செய்திகள்

மொரீசியஸ் வெளிவிவகார மந்திரியுடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு; இருதரப்பு உறவுகள் பற்றி மறுஆய்வு

டெல்லியில், 25-வது இந்திய பெருங்கடல் ரிம் கூட்டமைப்பின் மந்திரிகளுக்கான கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பான முக்கிய விசயங்கள் பற்றி மறுஆய்வு செய்யப்படும்.

புதுடெல்லி

டெல்லியில், மொரீசியஸ் வெளிவிவகார மந்திரியுடன், மத்திய மந்திரி ஜெய்சங்கர் இன்று சந்தித்து பேசினார்.

மொரீசியஸ் நாட்டின் வெளிவிவகார துறை மந்திரி தனஞ்செய் ரிதீஷ் ராம்புல் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக இன்று காலை புதுடெல்லிக்கு வந்தடைந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதுபற்றி மத்திய வெளிவிவகார அமைச்சக செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறும்போது, இந்திய பெருங்கடல் பகுதியில், நெருங்கிய நண்பர் மற்றும் மதிப்புமிக்க பங்குதாரராக உள்ள மொரீசியசுடனான நீடித்த கூட்டாண்மையை வலுப்படுத்தும் வகையில் ராம்புல்லின் இந்த பயணம் அமைந்துள்ளது என்றார்.

டெல்லியில், 25-வது இந்திய பெருங்கடல் ரிம் கூட்டமைப்பின் மந்திரிகளுக்கான கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பான முக்கிய விசயங்கள் பற்றி மறுஆய்வு செய்யப்படும். இந்த கூட்டத்தில் ராம்புல் பங்கேற்கிறார்.

மறுஆய்வு

இதன் ஒரு பகுதியாக, மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கரை அவர் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு பற்றி மத்திய மந்திரி ஜெய்சங்கர் வெளியிட்ட எக்ஸ் வலைத்தள பதிவில், ராம்புல்லை சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த சந்திப்பில் சிறப்பு பொருளாதார திட்டத்தின் கீழ் உள்ள வளர்ச்சிக்கான விசயங்கள் உள்பட நம்முடைய இருதரப்பு உறவுகளில் உள்ள முக்கிய விசயங்கள் பற்றி மறுஆய்வு செய்யப்பட்டது.

அப்போது, இந்தியாவின் மகாசாகர் தொலைநோக்கு திட்டம் மற்றும் அண்டை நாட்டுக்கு முதலில் உதவுதல் கொள்கை ஆகியவற்றின் கீழ் மொரீசியசுக்கான வளர்ச்சிக்கான முன்னுரிமை திட்டங்களுக்கு ஆதரவளிப்பதில் இந்தியாவின் உள்ளார்ந்த ஈடுபாட்டை இன்னும் வலுப்படுத்துவது உள்ளிட்டவையும் மறுஆய்வு செய்யப்பட்டது என பதிவிட்டு உள்ளார்.

SCROLL FOR NEXT