புதுடெல்லி,
மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல், வரும் அக்டோபர் 22-ந்தேதி(நாளை) முதல் 27-ந்தேதி வரை ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து ஆகிய இரண்டு ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு, இந்தியாவுக்கும் அந்நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீடுகளை அதிகரிப்பதற்கான வழிகள் குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளார்.
இந்த பயணத்தின்போது அவருடன் சுமார் 100 வணிக தலைவர்கள் உடன் செல்ல உள்ளனர். பெர்லினில் 22-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை, சர்வதேச அரசுகளின் பிரதிநிதிகள் மற்றும் உலகளாவிய வணிக தலைவர்களுடன் கலந்துரையாடி, இந்தியாவின் பொருளாதார நிலைத்தன்மை, உற்பத்தி திறன்கள் மற்றும் மீள்திறன் கொண்ட உலகளாவிய விநியோக சங்கிலிகளை கட்டமைப்பதில் இந்தியாவின் முக்கியப் பங்கு ஆகியவை குறித்து பியூஷ் கோயல் எடுத்துரைப்பார் என மத்திய தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் ஜெர்மனியின் எரிசக்தித்துறை மந்திரி மற்றும் நிதி கொள்கை ஆலோசகர் ஆகியோருடன் பியூஷ் கோயல் இருதரப்பு சந்திப்புகளை நடத்த உள்ளார். இந்த சந்திப்புகளின்போது இந்தியா-ஜெர்மனி இடையிலான இருதரப்பு வர்த்தகம், தொழில்துறை ஒத்துழைப்பு, இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் மூலம் உருவாகும் சந்தை முதலீடுகள் குறித்து ஆய்வு செய்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து நெதர்லாந்தின் ஹேக் நகரில், அக்டோபர் 24-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை, அந்நாட்டு அரசுடனான இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்கு பியூஷ் கோயல் தலைமை தாங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் பொருளாதார விவகாரங்கள் மற்றும் காலநிலை மந்திரி, வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு ஒத்துழைப்பு மந்திரி ஆகியோருடன் பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.