தேசிய செய்திகள்

திருப்பதியில் வரலாறு காணாத கூட்டம்.. 5 கிலோ மீட்டர் தூரம் வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்

இதே கூட்டம் அடுத்த சில வாரங்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலை,

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோடை விடுமுறையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது. கடந்த 5 நாட்களாக திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகின்றனர். வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஆக்டோபஸ் படை வீரர்கள் அலுவலகம் வரை பக்தர் கள் காத்திருக்கிறார்கள். இந்தக் கூட்டம் அடுத்த சில வாரங்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்ரீவாரி கோவில் வளாகம், லட்டு விற்பனை மையங்கள், அதிக பக்தர்கள் கூடும் பிற இடங்களை சுற்றி நிழற்பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. தரையில் வெப்பத்தில் இருந்து பக்தர்களை பாதுகாக்க கோவிலின் நான்கு மாட வீதிகளிலும் 'சிந்தடிக் எனாமல் கூல் பெயிண்ட்' பூசப்பட்டுள்ளது. பாத கங்கையம்மன் கோவில் சந்திப்பு முதல் வெளிவட்ட சாலை வரையிலான தரிசன வரிசை பாதைகளில் தற்காலிக கழிப்பறைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

வெளியே நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் பக்தர்களுக்கு, ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள் குடிநீர், அன்னப்பிரசாதங்களை வழங்கி வருகின்றனர். தேவஸ்தான சுகாதாரத் துறை அதிகாரிகள் மேற்பார்வையின் கீழ், அதிக பக்தர்கள் கூடும் இடங்களில் நடமாடும் குடிநீர் தொட்டிகள் பயன்படுத்தப்பட்டு, ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள் வாயிலாக வெளியே வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு குடிநீர் வழங்கி வருகின்றனர்.

கூட்ட நெரிசலின் தன்மைக்கு ஏற்ப, வெளிவட்ட சாலையில் உள்ள தரிசன வரிசைகளில் நடமாடும் முதலுதவி மையமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

திருமலையில் தங்கும் வசதிகள் குறைவாகவே உள்ளதால் பக்தர்கள் சாலையோரமும், பூங்காக்களிலும் தங்கி ஓய்வெடுத்து வருகின்றனர். தேவஸ்தானத்தால் ஒரே நேரத்தில் சுமார் 60 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தங்கும் வசதியை ஒதுக்கீடு செய்ய முடிகிறது. அமைனிட்டி காம்ப்ளக்ஸ்-1, 2, 3, 4, 5 ஆகிய இடங்களில் மொத்தம் 9 ஆயிரம் லாக்கர்கள் (பொருட்கள் வைப்பறைகள்) உள்ளன. தற்போது இந்த வசதிகள் அனைத்தும் பக்தர்களின் அதிகப்படியான வருகையால் முழுமையாக நிரம்பி விட்டன.

தலைமுடி காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்காக தேவஸ்தானம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. பிரதான கல்யாணகட்டாவுடன் சேர்த்து 11 சிறிய அளவில் மினி கல்யாணகட்டாக்களும் பக்தர்களுக்காக 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றன. கடந்த 5 நாட்களில் மட்டும் 4 லட்சத்து 32 ஆயிரத்து 213 பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்துள்ளனர். 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் மொத்தம் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துள்ளனர்.

தலைமுடி காணிக்கை செலுத்திய பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் 43 ஆயிரத்துக் கும் மேற்பட்ட பக்தர்கள் தங்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தி உள்ளனர். கடந்த 5 நாட்களில், திருமலையில் பல்வேறு இடங்களில் சுமார் 19 லட்சம் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம், தேநீர், காபி, பால் மற்றும் மோர் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.