வாரணாசி
உத்தர பிரதேசத்தில் விமான நிலையத்தில் ஆயுத சோதனையின்போது துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் 2 பேர் காயம் அடைந்தனர்.
உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகரில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று காலை ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட தயாரானது. காலை 9.30 மணியளவில் பயணிகளிடம் ஆயுத சோதனை நடைபெற்றது.
அப்போது, வாரணாசியில் இருந்து மும்பை செல்வதற்காக மனைவியுடன் வந்திருந்த பயணி ஒருவர் வரிசையில் காத்திருந்துள்ளார். அதிகாரிகள் வழக்கம்போல் அவரிடம் ஆயுத சோதனை செய்தபோது, அவர் வைத்திருந்த துப்பாக்கி திடீரென வெடித்துள்ளது.
இந்த சம்பவத்தில், துப்பாக்கி குண்டு தரையில் பட்டு, பின்னர் பெண் ஒருவரின் தொடையில் பாய்ந்தது. அருகேயிருந்த சிறுவன் ஒருவனின் கையிலும் அந்த குண்டு துளைத்தது. இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால், காயமடைந்த 2 பேரும் மீட்கப்பட்டு ஹர்ஹுவா நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர் என விமான நிலைய இயக்குநர் கூறியுள்ளார்.