சீதாபூர் ,
லக்னோவில் நடைபெறும் உத்திரப்பிரதேச முதலீட்டாளர்கள் மாநாட்டிற்குச் சென்ற பாஜக எம்.எல்.ஏ லோகேந்திர சிங்கின் கார் கமலாபூர் அருகே விபத்துக்குள்ளானது. இதில் எம்.எல்.ஏ உட்பட நான்கு பேர் பலியாகினர்.
இந்த விபத்து குறித்து போலீசார் கூறுகையில், உத்திரப்பிரதேச முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு பிஜ்னோர் மாவட்டத்தின் நூர்பூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ லோகேந்திர சிங் தனது பாதுகாவலர்கள் இருவருடன் காரில் லக்னோ நோக்கி சென்றிருக்கிறார். கமலாபூர் அருகே செல்கையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையைக் கடந்து மறுபுறத்தில் எதிரே வந்த டிரக்குடன் மோதியுள்ளது. இந்த பயங்கர விபத்தில் எம்.எல்.ஏ லோகேந்திர சிங் (45), அவரது பாதுகாவலர்கள் தீபக் குமார் (32), ப்ரிஜிஸ் மிஸ்ரா (30) மற்றும் டிரக் க்ளீனர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் கார் மற்றும் டிரக் ஓட்டுனர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனக் கூறினர்.
முன்னதாக, இன்று லக்னோவில் நடைபெற்ற உத்திரப்பிரதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.