ஹாப்பூர்
உத்தர பிரதேசத்தில் கிரேட்டர் நொய்டாவின் தாத்ரி பகுதியை சேர்ந்தவர் சாஹில். இவர், தன்னுடைய குடும்பத்தினருடன் அருகேயுள்ள மீரட் மாவட்டத்தில் கித்தோர் நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளனர்.
அப்போது அவர்கள் கூகுள் மேப் பயன்படுத்தி உள்ளனர். பராமரிப்பு பணியால் டெல்லி பதக் மேம்பாலம் அருகேயுள்ள சாலை மூடப்பட்டு உள்ளது. இதனால், கூகுள் மேப் மாற்று வழியை அடையாளம் காட்டியுள்ளது.
அவர்கள் ஹாப்பூர் மாவட்டத்தில் ஆனந்த் விஹார் யோஜனா பகுதிக்கு வந்தபோது, சாலையில் நீர் தேங்கி இருந்துள்ளது. ஆனால், அதனை பெரிய அளவில் எடுத்து கொள்ளாமல் இருளான பகுதிக்குள் தொடர்ந்து காரை ஓட்டி சென்றதில், சாலையோர சாக்கடையின் ஆழத்தில் சென்று சிக்கி கொண்டார்.
அவருடைய காரின் கதவுகளையும் திறக்க முடியாத வகையில், பழுது ஏற்பட்டு உள்ளது. இதனால், காருக்குள் 5 பேரும் சிக்கி கொண்டனர்.
எனினும், 112 என்ற எண்ணில் போலீசாரை தொடர்பு கொண்டனர். அவர்கள், தீயணைப்பு துறையினரின் உதவியுடன் 5 பேரையும் 2 மணிநேர போராட்டத்திற்கு பின்னர் மீட்டனர். அவர்களுக்கு சாஹிலின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்து கொண்டனர்.