தேசிய செய்திகள்

உ.பி.: மரணத்திலும் இணை பிரியாத தம்பதி; காலையில் கணவருக்கு, மாலையில் மனைவிக்கு இறுதி சடங்கு

கணவர் மரணம் அடைந்த துயரத்தில் இருந்த மனைவி சாச்சி திவாரி அழுது கொண்டே இருந்துள்ளார்.

லக்னோ

உத்தர பிரதேசத்தின் அயோத்தியா நகரில் ரேவளி கிராமத்தில் வசித்து வந்தவர் பகவான் திவாரி (வயது 80). இவருடைய மனைவி சாசி திவாரி (வயது 75). வயது முதிர்வால், கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த பகவான் கடந்த வெள்ளிக்கிழமை காலை திடீரென காலமானார்.

இந்த செய்தி கேட்டதும் அவருடைய உறவினர்கள், கிராமத்தினர் என பலரும் பகவான் வீட்டில் குவிய தொடங்கினர். காலை 11 மணியளவில் அவருடைய இறுதி சடங்குகள் நடந்தன. கணவர் மரணம் அடைந்த துயரத்தில் இருந்த மனைவி சாச்சி திவாரி அழுது கொண்டே இருந்துள்ளார்.

மற்றொரு அதிர்ச்சி

அவர்கள் அனைவரும் வீட்டுக்கு திரும்பிய சில மணிநேரத்தில் அவர்களுக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது. சாச்சியின் உடல்நலம் பாதிக்கப்பட்டு அவரும் காலமானார். இந்த இரட்டை இழப்பால், அந்த குடும்பத்தினர் மனமுடைந்து விட்டனர்.

பல தசாப்தங்களாக இன்பம், துன்பம், போராட்டம் மற்றும் மகிழ்ச்சி என வாழ்க்கையின் ஒவ்வொரு விசயத்திலும் அதனை பங்கு போட்டு கொண்ட இந்த தம்பதி மரணத்திலும் இணை பிரியாமல் சென்று விட்டனர். வயது முதிர்விலும் ஒருவருக்கு ஒருவர் அவர்கள் ஆதரவாக இருந்தனர். அன்பு மற்றும் பாசப்பிணைப்புக்கு எடுத்துக்காட்டாக அவர்கள் இருக்கின்றனர் என கிராமத்தினர் பேசியபடி சென்றனர். இதனால் காலையில் கணவருக்கும், மாலையில் மனைவிக்கும் இறுதி சடங்குகள் நடந்தன.