தேசிய செய்திகள்

உ.பி.: ஒரே குடும்பத்தின் 5 பேர் மர்ம மரணம்; விஷம் வைத்து கொலையா? என விசாரணை

எனினும் அக்கம்பக்கத்தினர் கூறிய விசயங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன.

கிரேட்டர் நொய்டா

உத்தர பிரதேசத்தில் ஒரே குடும்பத்தின் 5 பேர் மர்ம மரணம் அடைந்து கிடந்த நிலையில், அவர்கள் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டனரா? என விசாரிக்கப்பட்டு வருகிறது.

உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா அருகே உள்ள நக்லா ஸ்ரீபதம் கிராமத்தில் வசித்து வந்தவர் மகேஷ் (வயது 37). இவரது மனைவி லலிதா (வயது 35). இந்த தம்பதிக்கு, மிஷ்டி (வயது 7) என்ற மகளும், லட்டு (வயது 11), சக்ஷத் (வயது 3) என்ற 2 மகன்களும் இருந்தனர். இந்த நிலையில் இன்று காலை வீட்டில் 5 பேரும் உயிரிழந்து கிடந்தனர்.

முதற்கட்ட விசாரணை

இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 5 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் உணவு விஷமானதால் 5 பேரும் உயிரிழந்ததாக தெரிகிறது என்று போலீசார் தெரிவித்தனர்.

இதுபற்றி மகேசின் தாய் கூறும்போது, 5 பேரும் நேற்று இரவு நூடுல்ஸ், தேநீர் சாப்பிட்டனர் என்றார். இதனை தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் மற்றும் உணவுப்பாதுகாப்பு துறையைச்சேர்ந்த குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மாதிரிகளை சேகரித்தனர். 5 பேரின் உயிரிழப்பிற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை.

காரசார வாக்குவாதம்

சம்பவம் பற்றி கிரேட்டர் நொய்டா டி.சி.பி. ஷ்ரவன் குமார் சிங் கூறும்போது, அவர்களுடைய உடல்கள் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டன. அதன் அறிக்கைகள் மற்றும் தடயவியல் ஆய்வுகளின் முடிவுகளுக்கு பிறகே விசயம் பற்றி தெரியவரும். அதன் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

எனினும் அக்கம்பக்கத்தினர் கூறிய விசயங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. அவர்கள் கூறும்போது, மகேஷின் தாய்தான் நூடுல்ஸ் சமைத்து தந்துள்ளார். நேற்றிரவு மகேஷின் 3 குழந்தைகளும் தூங்கிய பின்னர், அவருக்கும், அவருடைய தாய்க்கும் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, தன்னுடைய மகளுக்கு வீட்டை எழுதி வைத்து விட்டேன் என்று தாய் கூறியுள்ளார். உங்களை இந்த வீட்டில் வாழ விடமாட்டேன். வீட்டை விட்டு வெளியேறுங்கள் என சத்தம் போட்டார்.

அவர்கள் எல்லா நாளும் சண்டை போட்டு கொண்டிருந்தனர். இந்த விசயத்தில் கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர். இதனால், அவர்கள் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டனரா? என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT