தேசிய செய்திகள்

உ.பி.: அயோத்தி ராமர் கோவில் பக்தர்கள் வசதிக்காக மார்ச் 27-ல் பொது விடுமுறை - அரசு அறிவிப்பு

பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக நாளையுடன், நாளை மறுநாளும் (27-ந்தேதி) என 2 நாட்கள் விடுமுறை விட அரசு முடிவு செய்துள்ளது.

லக்னோ

உத்தர பிரதேசத்தில் அயோத்தி நகரில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு உள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் நாளை ராம நவமி கொண்டாடப்படுகிறது. இதனை சிறப்பாக கொண்டாட முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.

இதனை முன்னிட்டு அயோத்தி உள்பட பல்வேறு மத தலங்களிலும் சிறப்பு தரிசனங்கள், வழிபாடுகள் இருக்கும். ஊர்வலங்களும், பெரிய பெரிய நிகழ்ச்சிகளும் நடைபெற கூடும். அதனால், பக்தர்களின் வசதிக்காக அயோத்தி ராமர் கோவிலை 24 மணிநேரமும் திறந்து வைக்கும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது. சி.சி.டி.வி. கேமராக்கள் வழியே கண்காணிப்பு மேற்கொள்ளப்படுவதுடன், பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.

ராம நவமியை முன்னிட்டு ராமர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக நாளையுடன், நாளை மறுநாளும் (27-ந்தேதி) என 2 நாட்கள் விடுமுறை விட அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டு உள்ளது. இதனால், சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களுடன் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறையாக இருக்கும். கடந்த ஆண்டும், அதற்கு முந்தைய ஆண்டும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருந்தது. இதனால், கோவிலில் கூட்ட நெருக்கடியாக இருந்தது. இதனை தவிர்க்கும் நோக்கில் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.