கான்பூர்
உத்தர பிரதேசத்தின் காஸ்கஞ்ச் மாவட்டத்தில் யகுத்கஞ்ச் கிராமத்தில் வசித்து வருபவர் ஜஸ்வீர் கோலா. இவருடைய மகன் யஷ்பால் என்ற யாஷ் (வயது 9). கோலாவின் வீட்டில், அவருடைய மற்றொரு மகனுக்கு பெயர் சூட்டும் விழா நேற்று நடந்தது.
இதில், கோலாவின் உறவினர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். அவர்களில் யஷ்பாலின் மாமாவான தனேஷ் யாதவ் என்ற ராம்பரோசிலால் யாதவ் என்பவரும் ஒருவர். குடிபோதையில் இருந்த இவர், யஷ்பாலிடம் குடிக்க தண்ணீர் கொண்டு வரும்படி கூறியுள்ளார்.
ஆனால், அந்த சிறுவன் மறுத்து விட்டான் என கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த தனேஷ், தற்காப்புக்காக மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து சிறுவனின் வயிற்றில் சுட்டுள்ளார்.
சிறுவன் அலறிய சத்தம், துப்பாக்கி குண்டு வெடித்த சத்தம் ஆகியவற்றை கேட்டு உறவினர்கள் பதறியடித்து சம்பவ பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது, பலத்த காயத்துடன் கிடந்த சிறுவனை சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கும் பின்னர் அலிகார் நகரில் உள்ள மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர்.
எனினும், அதில் பலனின்றி நேற்றிரவு 9.30 மணியளவில் சிறுவன் உயிரிழந்து விட்டான். சம்பவத்திற்கு பின்பு, மாமா தனேஷ் அந்த பகுதியில் இருந்து தப்பியோடி விட்டார். சம்பவம் நடந்த 12 மணிநேரத்தில் போலீசார் தனிப்படை அமைத்து தனேஷை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.