லக்னோ,
உத்தரப்பிரதேசத்தில் மனைவியைக் கொன்று நாடகமாடிய கணவரை, மகனின் வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் மகோபா பகுதி பன்வாரி போலீஸ் நிலைய பகுதிக்கு உட்பட்ட பிஜ்ராரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹனீப் மன்சூரி. அவருக்கு மது மற்றும் சூதாட்டப் பழக்கம் இருந்தது. அவரின் மனைவி மனிஷா மன்சூரி (வயது 27). அவர் 8 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
இந்த தம்பதியினருக்கு பைசான் (வயது 5) என்ற மகனும் உண்டு. வழக்கம் போல ஹனீப் மது அருந்திவிட்டு குடும்பத்தில் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு, ஹனீப் கடுமையான குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். அப்போது அவருக்கும், அவரது 8 மாத கர்ப்பிணி மனைவிக்கும் இடையே கடும் வாக்குவாதம் வெடித்தது.
ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற ஹனீப், வீட்டில் இருந்த கூர்மையான அரிவாளை எடுத்து தனது மனைவியின் தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் கொடூரமாக வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
மனைவி இறந்ததை அடுத்து, சட்டத்திலிருந்து தப்பிக்க நினைத்த ஹனீப், தானே போலீசாருக்கு தொலைபேசி வாயிலாகத் தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரிடம், தனது மனைவிக்கு ஏதோ நேர்ந்துவிட்டது போலவும், தனக்கு எதுவும் தெரியாது என்றும் நாடகமாடி முன்னுக்குப் பின் முரணான பதில்களைக் கூறி திசைதிருப்ப முயன்றார்.
இருப்பினும், அந்த பெண்ணின் உடலில் இருந்த காயங்கள் சந்தேகத்தை ஏற்படுத்தியதால் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, இக்கொடூரச் சம்பவத்தை நேரில் பார்த்த அவர்களின் மகன் பைசான், போலீசாரிடம் நடந்த உண்மைகளைத் துணிச்சலாகக் கூறினான். "அப்பா குடித்துவிட்டு வந்து அம்மாவை அரிவாளால் வெட்டினார்" என சிறுவன் அளித்த நேரடி வாக்குமூலம் வழக்கின் போக்கை மாற்றியது.
சிறுவனின் சாட்சியத்தை அடுத்து, போலீசார், ஹனீப்பை தீவிரமாக கையாண்டதில், அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். உடனடியாக அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரைக் கைது செய்து சிறையிலடைத்தனர். உயிரிழந்த பெண்ணின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டது.
மது அரக்கனால் கர்ப்பிணிப் பெண் கொல்லப்பட்டதும், 5 வயது சிறுவன் தன் தாயின் கொலையை நேரில் பார்த்ததும் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.