மெயின்புரி,
உத்தரபிரதேச மாநிலம் மெயின்புரியைச் சேர்ந்த ரூபாலி குப்தா என்பவருக்கும், ஏட்டா மாவட்டத்தைச் சேர்ந்த சிவம் குப்தா என்பவருக்கும் கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி திருமணம் நடைபெற்றது. சிவம் குப்தா மும்பையில் ஒரு முன்னணி நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் இன்ஜினியராகப் பணியாற்றி வருகிறார். மாதம் 2.5 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கும் இவர், 15 நாட்களுக்கு ஒருமுறை வீட்டிற்கு வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், தனது கணவர் வரதட்சணை கேட்டுத் துன்புறுத்துவதாகவும், பிற ஆண்களுடன் இயற்கைக்கு மாறான உறவில் ஈடுபடுவதாகவும் ரூபாலி குப்தா போலீஸில் புகார் அளித்துள்ளார்.
தங்கள் திருமணத்திற்காகப் பெற்றோர் சுமார் 1 கோடி ரூபாய் வரை செலவு செய்ததாகவும், ரொக்கம், நகை என அனைத்தும் கொடுத்தும் தனது கணவர் திருப்தியடையவில்லை என்றும் கூடுதலாக 50 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டு தன்னை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சித்ரவதை செய்ததாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், திருமணத்திற்குப் பிறகு தனது கணவர் தன்னிடம் உடலுறவு கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை என்றும், சில ஆண் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வந்து ரகசிய செயலில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனால், சந்தேகமடைந்து ரகசிய கேமராக்களைப் பொருத்தியதாகவும் அதில், தனது கணவர் வீட்டிற்குப் பிற ஆண்களை அழைத்து வந்து, அவர்களுடன் இயற்கைக்கு மாறான மற்றும் ஆபாச செயல்களில் ஈடுபட்டது தெரியவந்ததாகவும் கூறி உள்ளார்.
இது குறித்து கணவரிடம் கேட்டபோது, "இந்த விவகாரத்தை யாரிடமாவது சொன்னால் உன்னைக் கொன்றுவிடுவேன்" என அவர் மிரட்டியதாக ரூபாலி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். பயத்தின் காரணமாகவே இவ்வளவு காலம் புகார் அளிக்கத் தயங்கியதாக அவர் கூறியுள்ளார். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.