தேசிய செய்திகள்

மே மாதத்தில் புதிய உச்சம் தொட்ட யுபிஐ பரிவர்த்தனை

கடந்த மே மாதத்தில் இதுவரை இல்லாத உச்சமாக யுபிஐ பரிவர்த்தனை அதிகரித்துள்ளது .

இந்தியாவில் ஆன்லைன் பரிவர்த்தனைகள் என்பது நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு அதிகரித்துவிட்டது. டீக்கடை முதல் ஷாப்பிங் மால் வரை டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக ஜிபே, போன்பே, உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி யுபிஐ பரிவர்த்தனையை பயன்படுத்தி வருகிறார்கள்.

வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள யுபிஐ ஐடி மூலம் சில வினாடிகளில் பரிவர்த்தனை செய்ய முடியும். இந்த வகை பரிவர்த்தனை வேகமாகவும் இருப்பதால், பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த மே மாதத்தில் இதுவரை இல்லாத உச்சமாக யுபிஐ பரிவர்த்தனை அதிகரித்துள்ளது .கோடைகாலப் பயணம், ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஆகியவற்றின் காரணமாக, மே மாதத்தில் மட்டும் ரூ.29.90 லட்சம் கோடி மதிப்பிலான 2,320 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய தேசிய பரிவர்த்தனை கழகம் (என்பிசிஐ) தெரிவித்துள்ளது. இதற்கு முந்தைய ஏப்ரல் மாதத்தில் ரூ.29.03 லட்சம் கோடி மதிப்பிலான 2,235 கோடி பரிவர்த்தனைகள் பதிவாகியிருந்தது.