தேசிய செய்திகள்

யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு

மொத்தம் 13 ஆயிரத்து 343 தேர்வர்கள் அடுத்த கட்டமான முதன்மைத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

புதுடெல்லி,

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) மூலம் இந்திய நிர்வாகப் பணி (ஐஏஎஸ்), இந்திய காவல் பணி (ஐபிஎஸ்), இந்திய வெளியுறவுப் பணி (ஐஎப்எஸ்) உள்ளிட்ட உயர்நிலை குடிமைப் பணிகளுக்கான அதிகாரிகள் ஆண்டுதோறும் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், 2026-ம் ஆண்டுக்கான குடிமைப் பணிகள் முதல்நிலைத் தேர்வு நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் நேற்று நடைபெற்றது. இந்த ஆண்டு 933 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேர்வில் பங்கேற்க 8 லட்சத்து 19 ஆயிரத்து 372 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

காலை மற்றும் மாலை என இரண்டு அமர்வுகளாக நடைபெற்ற தேர்வில், காலை நடைபெற்ற பொது அறிவுத் தாள் கடினமாக இருந்ததாகவும், பிற்பகல் நடைபெற்ற திறனறித் தேர்வு ஒப்பீட்டளவில் எளிதாக இருந்ததாகவும் தேர்வர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில், முதல்நிலைத் தேர்வின் முடிவுகளை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, மொத்தம் 13 ஆயிரத்து 343 தேர்வர்கள் அடுத்த கட்டமான முதன்மைத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

தேர்வர்கள் தங்களது முடிவுகளை யுபிஎஸ்சியின் https://upsconline.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் முதன்மைத் தேர்வில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்களை வருகிற ஜூன் 19 முதல் 28-ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம் என்று மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.