புதுடெல்லி,
அமெரிக்கா - ஈரான் போரால் கடந்த இரு மாதத்திற்கும் மேலாக மேற்காசியாவில் பதற்றம் நிலவுகிறது. அவ்வப்போது வான்வழி தாக்குதல்களும் பிராந்தியத்தில் நடைபெற்றதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் பயணிகள் வருகை குறைந்ததாலும், பல்வேறு நிறுவனங்களும் விமான சேவைகளை நிறுத்தின.
அந்த வகையில், இந்தியாவின் முக்கிய விமான போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியாவும் சேவையை நிறுத்தியது. போர் தொடங்கியபோது ஏப்ரல் வரை விமான சேவை இடைநிறுத்தம் செய்யப்பட்ட நிலையில் தற்போது அது ஜூலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் தொடங்கியது முதலே பல நாடுகளின் விமான சேவைகள் மிக மோசமான பாதிப்பைச் சந்தித்தன. வான்வழி கட்டுப்பாடுகள் காரணமாக விமானங்கள் அதிக எரிபொருள் செலவு போன்ற சவால்களை எதிர்கொள்கின்றன. மே மாதத் தொடக்கத்தில் ஜூன் வரை இஸ்ரேலுக்கான விமானங்களை இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்த ஏர் இந்தியா, போர் பதற்றம் நீடிப்பதால் தற்போது அதனை ஜூலை 31 வரை நீட்டித்துள்ளது.
உலகம் முழுவதும் பல விமான சேவை நிறுவனங்கள் இஸ்ரேல் மற்றும் ஈரான் பிராந்திய வான்வழியைத் தவிர்த்து வருகின்றன என்பது குறிப்பிடதக்கது.