புதுடெல்லி,
அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மார்கோ ரூபியோ அரசு முறைப் பயணமாக இந்திய வந்தடைந்தார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மார்க்கோ ரூபியோ உஸ்பெகிஸ்தான் பயணத்தை முடித்துக்கொண்டு அரசு முறைப் பயணமாக இன்று (அக். 20) இந்தியா வந்தடைந்தார். மும்பை விமான நிலையம் வந்தடைந்த அவரையும் அவரது மனைவி ஜெனட் ரூபியோவையும் இந்தியாவின் அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் மற்றும் இந்திய அதிகாரிகள் நேரில் சென்று வரவேற்றனர்.
இந்தநிலையில், மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னவீஸை சந்தித்தார். தொடர்ந்து மும்பையில் உள்ள புகழ்பெற்ற கேட்வே ஆப் இந்தியாவைப் பார்வையிட்டார்.
அந்தச் சந்திப்புக்குப் பின் மும்பையில் இருந்து குஜராத்தின் ஜாம்நகருக்குச் செல்வார் என அவரது பயணத் திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பயணத்தில், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை நேரில் சந்திக்கும் ரூபியோ, எரிசக்தி, வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இருதரப்புக்கும் இடையேயான உறவுகள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தைகள் நடத்துவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, மும்பையில் நடைபெறும் பிரீடம் 250 எனும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரூபியோ தாஜ் ஹோட்டலில் உள்ள 2008 பயங்கரவாதத் தாக்குதலின் நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவார் என கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, நிகழாண்டில் (2026) மட்டும் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ரூபியோ இந்தியாவுக்கு 2 ஆவது முறையாக வருகை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வழக்கத்திற்கு மாறாக அவர் நாட்டின் தலைநகரான புதுடெல்லிக்கு செல்லாமல், நேரடியாக மும்பைக்கு வருகை தந்துள்ளது இராஜதந்திர வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.