புதுடெல்லி
இந்தியாவுக்கு 4 நாள் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவு துறையின் மந்திரி மார்கோ ரூபியோ டெல்லியில் பிரதமர் மோடியை இன்று நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் உள்ளிட்ட முக்கிய நபர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் முக்கிய தொழில் நுட்பங்கள் தொடர்பாக இந்தியா மற்றும் அமெரிக்காவின் உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடியுடன் ரூபியோ பேசினார். இது ஆக்கப்பூர்வ சந்திப்பாக இருந்தது என அமெரிக்க தூதர் கோர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவுக்கு இந்திய முக்கியதொரு கூட்டாளியாகும். இரு நாடுகளும் தடையற்ற மற்றும் வெளிப்படையான இந்தோ-பசிபிக்கை நோக்கி தொடர்ந்து முன்னேறுகிறது என்றும் அவர் சுட்டி காட்டினார்.
இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, முதலில், கொல்கத்தாவில் உள்ள அன்னை தெரசா நிறுவிய கருணை பணியாளர் அமைப்பின் தலைமையகத்திற்கு சென்று அவர் பார்வையிட்டார். இதன்பின்னர், கொல்கத்தாவின் புகழ்பெற்ற விக்டோரியா நினைவகத்திற்கும் சென்றார்.
அமெரிக்க வெளியுறவு மந்திரியாக பதவியேற்ற பின்பு மார்கோ ரூபியோ இந்தியா வருவது இதுவே முதல் முறையாகும். அவர், ஆக்ரா மற்றும் ஜெய்ப்பூர் நகரங்களுக்கும் செல்ல திட்டமிட்டு உள்ளார். டெல்லியில் வருகிற 26-ந்தேதி நடைபெறும் குவாட் கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் கூட்டத்திலும் அவர் பங்கேற்கிறார்.