தேசிய செய்திகள்

கனிம வளங்களை ஆயுதமாகப் பயன்படுத்துவது வளர்ச்சியைப் பாதிக்கும்: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி உரை

தொழில்நுட்பம் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த கனிம வளங்களை ஆயுதமாக பயன்படுத்துவது நமது பொதுவான முன்னேற்றத்துக்கு தடையாக அமையக்கூடும்.

புதுடெல்லி:

புதுடெல்லியில் நடைபெற்ற 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்றுடன் நிறைவடைகிறது. மாநாட்டின் 2-வது நாள் அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது: பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே அனைவருக்கும் பயன் அளிக்கும் வகையிலான ஒத்துழைப்பை உருவாக்க வேண்டும். இந்த ஆண்டு பிரிக்ஸ் மாநாட்டில் ‘பின்னடைவை எதிர்கொள்ளும் திறன், புதுமை, ஒத்துழைப்பு, நிலைத்தன்மை’ ஆகிய 4 முக்கிய அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருந்தது.

இந்த முயற்சிகளுக்கு உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்பும் ஆதரவும் கிடைத்ததன் மூலம், பொதுவான இலக்குகளை அனைவருக்கும் பயன் அளிக்கும் ஒத்துழைப்பாக மாற்ற முடிந்தது. பிரிக்ஸ் இணைப்பு திட்டத்தின் மூலம் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு, பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு, சமூக பாதுகாப்பு மற்றும் திறன் வளர்ப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை அறிவு, நிதி மற்றும் புதிய சந்தைகளுடன் இணைக்கும் வகையில் பிரிக்ஸ் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான ஒத்துழைப்பு இணையதளத்தை உருவாக்கும் முயற்சி தொடங்கப்பட்டுள்ளது

நமது நகரங்களுக்கு இடையே சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்வதற்கு உதவும் வகையில் பிரிக்ஸ் நகர்ப்புற போக்குவரத்து மையம் அமைக்கப்பட்டுள்ளது. பிரிக்ஸ் அமைப்பின் மூலம் நட்பு, கூட்டாண்மை மற்றும் ஒத்துழைப்பை இந்தியா முன்னெடுத்துள்ளது. பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு அரசுகளுக்கு இடையிலானதாக மட்டுமே இருக்கக்கூடாது என்று நாங்கள் முயற்சி செய்து வருகிறோம்.தொழில் முனைவோர், விவசாயிகள், ஆராய்ச்சியாளர்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் சாதாரண மக்கள் என சமூகத்தின் அனைத்து தரப்பினரும் பிரிக்ஸ் அமைப்பின் செயல்பாடுகளில் தீவிரமாக பங்கேற்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம்.

பிரிக்ஸ் டிஜிட்டல் வேளாண்மை கூட்டமைப்பு விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும். இதன் மூலம் செயற்கை நுண்ணறிவு, புவிசார் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பொது கட்டமைப்பு ஆகியவை விவசாயிகளின் உண்மையான தேவைகளுடன் ஒருங்கிணைக்கப்படும். தொழில்நுட்பம் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த கனிம வளங்களை ஆயுதமாக பயன்படுத்துவது நமது பொதுவான முன்னேற்றத்துக்கு தடையாக அமையக்கூடும். எனவே, தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதில் அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறைக்கு முக்கியத்துவம் அளித்துள்ளோம்” என்றார்.

SCROLL FOR NEXT