கலப்பட பால்கோவா 
தேசிய செய்திகள்

உத்தரப்பிரதேசம்: 1,600 கிலோ கலப்பட பால்கோவா பறிமுதல்

சுகாதாரமற்ற முறையில், வணிக நோக்கத்திற்காக பெருமளவில் பால்கோவா தயார் செய்யப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

லக்னோ,

உத்தரப் பிரதேச மாநிலம் தவுலானா பகுதியில் உள்ள லால்பூர் கிராமத்தில், சுமார் 1,600 கிலோ எடையுள்ள கலப்பட பால்கோவாவை உணவுப் பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்து அழித்துள்ளனர்.

நள்ளிரவு அதிரடி சோதனை

தீபாவளி பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சந்தைகளில் கலப்பட இனிப்புகள் மற்றும் பால் பொருட்கள் விற்பனையாவதைத் தடுக்க அதிகாரிகள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஹாபூர் மாவட்டத்தின் லால்பூர் கிராமத்தில் சட்டவிரோதக் கூடாரங்கள் அமைத்து பால்கோவா தயாரிக்கப்படுவதாக உணவுப் பாதுகாப்புத் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதனடிப்படையில், உணவுப் பாதுகாப்பு அதிகாரி சந்திரசேகர் மிஸ்ரா தலைமையிலான குழுவினர் நேற்று (புதன்கிழமை) இரவு 8 மணியளவில் குறிப்பிட்ட பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு சுகாதாரமற்ற முறையில், வணிக நோக்கத்திற்காக பெருமளவில் பால்கோவா தயார் செய்யப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

மண்ணில் புதைத்து அழிப்பு

சோதனையின் போது, பாமாயில் மற்றும் வனஸ்பதி (டால்டா) போன்ற மலிவான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டிருந்த 1,600 கிலோ கலப்பட பால்கோவாவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் சந்தை மதிப்பு சுமார் ரூ. 3.20 லட்சம் ஆகும். பறிமுதல் செய்யப்பட்ட பால்கோவாவில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், மீதமிருந்த ஒட்டுமொத்தப் பால்கோவாவும் ஜே.சி.பி எந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டு மண்ணுக்குள் புதைத்து உடனடியாக அழிக்கப்பட்டது.

அதிகாரிகள் எச்சரிக்கை

பண்டிகைக் காலங்களில் மக்கள் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் இது போன்ற கலப்பட உணவுப் பொருட்களை வாங்குவதைத் தவிர்க்குமாறும், நம்பகமான கடைகளில் மட்டுமே இனிப்புகளை வாங்குமாறும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

SCROLL FOR NEXT