லக்னோ,
உத்தரபிரதேசத்தில் மரம் மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் புலந்தசாஹர் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் இன்று மதியம் கார் சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உள்பட மொத்தம் 8 பேர் பயணித்தனர்.
இந்நிலையில், டிபாய் நகரில் இருந்து ரத்தன்பூருக்கு சென்றுகொண்டிருந்தபோது ஹரியா கிராமம் அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதியது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த 8 பேரும் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று காயமடைந்த அனைவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். எஞ்சிய 3 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.