தேசிய செய்திகள்

உத்தர பிரதேசம்: பணம் செலுத்தாமல் சென்ற கார் ஓட்டுநர் - தடுக்க முயன்ற பெட்ரோல் நிலைய ஊழியர் படுகாயம்

பணம் செலுத்தாமல் அதிவேகமாக சென்ற காரை நிறுத்த முயன்றபோது பெட்ரோல் நிலைய ஊழியர் கீழே விழுந்து படுகாயமடைந்தார்.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கொசாய்கஞ்ச் பகுதியில் அமைந்திருக்கும் பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் போடுவதற்காக நேற்று அதிகாலை 4 மணியளவில் கருப்பு நிற கார் ஒன்று வந்துள்ளது. அந்த காரில் இருந்தவர்கள் பெட்ரோல் நிலைய ஊழியர் சச்சின் குமாரிடம் ரூ.4,000-க்கு பெட்ரோல் போடுமாறு கூறியுள்ளனர்.

நிற்காமல் சென்ற கார்

அதன்படி ஊழியர் சச்சின் குமார் அந்த காரில் பெட்ரோலை நிரப்பிவிட்டு அதற்கான பணத்தை கேட்டுள்ளார். ஆனால் கார் ஓட்டுநர் திடீரென காரை எடுத்துக் கொண்டு அங்கிருந்து வேகமாக புறப்பட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த சச்சின் குமார், காரின் கதவை பிடித்து அவர்களை தடுத்து நிறுத்த முயன்றுள்ளார்.

ஊழியர் படுகாயம்

ஆனால் கார் நிற்காமல் சென்ற நிலையில், சச்சின் குமார் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டு, பின்னர் தரையில் விழுந்து படுகாயம் அடைந்தார். அவர் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக பெட்ரோல் நிலையத்தின் மேலாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட காரின் ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT