குட்டி தேவி 
தேசிய செய்திகள்

உத்தரபிரதேசம்: தம்பதிக்கு கிடைத்த ரூ.12 லட்சம் வைரங்கள்

கண்டெடுக்கப்பட்ட வைரங்கள் அனைத்தும் பன்னா மாவட்ட வைர அலுவலகத்தில் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பன்னா,

மத்திய பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தைச் சேர்ந்த வைரம் விளையும் பகுதியில், உத்தரபிரதேச தம்பதியினருக்கு ஒரே நாளில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள 4 வைரங்கள் கிடைத்துள்ளன. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொழிலில் நஷ்டம்

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் ஸ்ரீவாஸ். இவரது மனைவி குட்டி தேவி. ராஜ்குமாருக்கு ஜான்சியில் தொழிலில் கடுமையான நஷ்டம் ஏற்பட்டதால், தம்பதியினர் பெரும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்தனர். இதையடுத்து, அவர்கள் மத்திய பிரதேசத்தில் உள்ள குட்டி தேவியின் தாய் வீட்டிற்கு இடம்பெயர்ந்தனர். சமூக ஊடகங்கள் மூலம் பன்னாவில் வைரம் தோண்டி எடுக்கும் தொழிலை பற்றி அறிந்த குட்டி தேவி, கணவரிடம் நாமும் ஏன் முயற்சி செய்யக்கூடாது என்று கூறியுள்ளார்.

2 நாட்களில் அதிர்ஷ்டம்

இதனைத் தொடர்ந்து, பன்னா வைர அலுவலகத்தில் முறையாக அனுமதி பெற்று, கிராமத்தில் உள்ள ஒரு சுரங்கப் பகுதியை அவர்கள் குத்தகைக்கு எடுத்தனர். கடந்த 6 மாதங்களாக தம்பதியினர் இருவரும் அந்த சுரங்கத்தில் கடுமையான உழைப்பைச் செலுத்தி வந்தனர். அவர்களது உழைப்பிற்கு பலனாக, கடந்த 2 நாட்களில் அடுத்தடுத்து 5.16 காரட் எடை கொண்ட 4 வைரங்கள் அவர்களுக்கு கிடைத்தன.

ரூ.12 லட்சம் மதிப்பு

சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு சுமார் ரூ.12 லட்சம் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. கண்டெடுக்கப்பட்ட வைரங்கள் அனைத்தும் பன்னா மாவட்ட வைர அலுவலகத்தில் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த வைரங்கள் விரைவில் அரசின் அதிகாரப்பூர்வ ஏலத்தில் விற்பனைக்கு வைக்கப்படும்.

கடன் அடைக்க முடிவு

வைரம் கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கும் தம்பதியினர் கூறுகையில், "தொழில் நஷ்டத்தால் ஏற்பட்ட கடன்களை அடைக்க இந்தத் தொகை உதவும். மீதமுள்ள பணத்தை கொண்டு குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலத்தை நல்வழியில் அமைப்போம். மீண்டும் எங்கள் சொந்த ஊரான ஜான்சிக்கே சென்று புதிய தொழிலை தொடங்குவோம்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT