லக்னோ,
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மின்சாரக் கசிவால் மெழுகுவர்த்தி ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத் நகரின் கிருஷ்ணா காலனி பகுதியில் ஒரு மெழுகுவர்த்தி உற்பத்தி ஆலை இயங்கி வருகிறது. இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை திடீரென ஆலைக்குள் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. மெழுகுவர்த்திகள் மற்றும் அதற்கான மூலப்பொருள்கள் இருந்ததால், தீ மிக வேகமாகப் பரவி, கட்டடம் முழுவதும் கட்டுக்கடங்காமல் எரியத் தொடங்கியது.
இதில் ஆலையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மெழுகுவர்த்திகள், மூலப்பொருள்கள் மற்றும் இயந்திரங்கள் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளன. மேலும் அப்பகுதி முழுவதும் அடர்ந்த கரும்புகை சூழ்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் பல்வேறு கோணங்களில் தண்ணீரைப் பாய்ச்சி தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீ தற்பொழுது முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் தீ அருகில் இருந்த மற்ற வீடுகளுக்குப் பரவாமல் தடுக்கப்பட்டது.
இதுகுறித்து மொராதாபாத் மூத்த காவல் கண்காணிப்பாளர் சத்பால் அண்டில் கூறுகையில், "முதற்கட்ட ஆய்வுகளின்படி கட்டடத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகவே இந்த தீ விபத்து நேரிட்டுள்ளது என்று சந்தேகிக்கப்படுகிறது. விபத்து குறித்து தீவிரக் கண்காணிப்பு மற்றும் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன" என்றார். இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.