லக்னோ,
உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில், 80 வயது முதியவர் ஒருவர் தனது மறைவுக்குப் பிறகு மகளுக்கு சுமை ஏற்படக் கூடாது என்பதற்காக, தான் உயிருடன் இருக்கும்போதே தனக்கான 13-ம் நாள் இறுதிச் சடங்கை நடத்தியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டம், பரவுத் தாலுகாவிற்கு உட்பட்ட ஜோஹ்ரி கிராமத்தைச் சேர்ந்தவர் சவுத்ரி பல்ஜோர் சிங் (வயது 80). இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இவரது இல்லத்தில் உயிருடன் இருக்கும்போதே தனக்குத்தானே 13-ம் நாள் காரியம் நடத்தி ஊர்மக்களுக்கு விருந்து அளித்துள்ளார்.
பல்ஜோர் சிங்கிற்கு ஆண் வாரிசுகள் இல்லை. பிங்கி என்ற ஒரே ஒரு மகள் மட்டுமே உள்ளார். தனது இறப்புக்குப் பிறகு செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகள் மற்றும் விருந்து செலவுகள் தனது மகளுக்குப் பொருளாதார மற்றும் சமூகச் சுமையாக மாறிவிடக் கூடாது என அவர் கருதினார். மேலும், தனது இறுதி விருந்தை யாரும் விமர்சிக்கக் கூடாது என்பதற்காகவும், தானே முன்னின்று இதனைச் செய்ய முடிவெடுத்துள்ளார்.
கடந்த 15-ம் தேதி காலை பாரம்பரிய முறைப்படி யாகம் வளர்த்து சடங்குகள் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து, கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் என சுமார் 900 பேருக்கு மதிய விருந்து அளிக்கப்பட்டது. இதற்காக 8 சமையல்காரர்கள் நியமிக்கப்பட்டு, பாயசம், பூரி, காய்கறிகள் என பாரம்பரிய உணவு வகைகள் தயாரிக்கப்பட்டன.
இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, பல்ஜோர் சிங் தனது 10 வயதுப் பேரன் முகுலுக்குத் தலைப்பாகை அணிவித்து, குடும்பப் பொறுப்புகளை அவரிடம் ஒப்படைப்பதாக அறிவித்தார். மேலும், தனக்கு சொந்தமான 1.25 ஏக்கர் நிலத்தையும் பேரன் பெயருக்கு எழுதி வைத்துள்ளார். தந்தையின் இந்த முடிவால் தனக்கு எவ்வித வருத்தமும் இல்லை என்றும், அவரது விருப்பம் நிறைவேறியதில் மகிழ்ச்சியே என்றும் அவரது மகள் பிங்கி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.