தேசிய செய்திகள்

உத்தர பிரதேசம்: காதலனுடன் சேர்த்து வைக்கக் கோரி செல்போன் கோபுரம் மீது ஏறி இளம்பெண் போராட்டம்

போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி ஒருவழியாக இளம் ஜோடியின் திருமணத்துக்கு சம்மதிக்க வைத்தனர்.

லக்னோ,

உத்தரப்பிரதேச மாநிலம் பக்ரைச் பகுதியை சேர்ந்தவர் சைதா (வயது 18). இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த நூருதீன் (21) என்ற வாலிபரை உயிருக்கு உயிராக காதலித்து வந்தார். நூரு தீன் தற்போது வேலை நிமித்தமாக மும்பையில் வசித்து வருகிறார்.

அவர்கள் இருவரும் வேறுவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களின் காதலுக்கு இரு குடும்பத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் இதனால் காதலரை கரம்பிடிக்க முடியாதோ என்று மனமுடைந்த சைதா, தனது காதலை வெல்லவைக்க ஒரு அதிரடி முடிவை எடுத்தார்.

கிராமத்தில் இருந்த ஒரு உயரமான செல்போன் கோபுரத்தில் விறுவிறுவென ஏறினார். நூருதீனுடன் உடனடியாக தனக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும். அதுவரை கீழே இறங்க மாட்டேன் என்று உரத்த குரலில் கத்தினார். தகவலறிந்து வந்த போலீசாரும், கிராம மக்களும் எவ்வளவோ கெஞ்சியும் அவர் கீழே இறங்கவில்லை.

இதையடுத்து, போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி ஒருவழியாக இளம் ஜோடியின் திருமணத்துக்கு சம்மதிக்க வைத்தனர். உடனே ஒரு முஸ்லிம் மதகுரு வரவழைக்கப்பட்டு, மும்பையில் இருந்த நூருதீனுடன் வீடியோ அழைப்பு மூலம் தொடர்பு ஏற்படுத்தப்பட்டது. பின்னர் ஆன்லைனிலேயே இருவருக்கும் திருமண சடங்குகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டன.

இதனால் தனது காதல் திருமணம் உறுதியான நிம்மதியுடன் புதுப்பெண்ணாக கீழே இறங்கினார் சைதா. இதற்காக அவர் சுமார் 4 மணி நேரம் செல்போன் கோபுரத்தில் நின்றபடி போராடினார். இதனால் அந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT