டேராடூன்,
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டமாக் ஓடையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில், எல்லைச் சாலைகள் அமைப்பிற்குச் சொந்தமான இரும்புப் பாலம் நொடிப்பொழுதில் அடித்துச் செல்லப்பட்டது. இந்த அதிர்ச்சி வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள நிதிப் பள்ளத்தாக்கு பகுதியில் பெய்த கனமழை காரணமாக டமாக் ஓடையில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தின் சீற்றம் தாங்காமல் அங்கிருந்த இரும்புப் பாலம் முற்றிலும் உடைந்து ஆற்றுக்குள் விழுந்தது. இச்சம்பவத்தின் போது, பாலத்தின் அருகே இருந்த எல்லைச் சாலை அமைப்பின் ஒரு வாகனமும், அதன் ஓட்டுநரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாநிலப் பேரிடர் மீட்புப் படை மற்றும் தேசியப் பேரிடர் மீட்புப் படை குழுவினர், மாயமான ஓட்டுநரைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் நிதிப் பள்ளத்தாக்கு பகுதிக்கான போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. அப்பகுதியில் தற்காலிகப் போக்குவரத்துத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதோடு, மாற்றுப்பாதையை உருவாக்குவதற்கான பணிகளை எல்லைச் சாலை அமைப்பு அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர்.