காட்டு யானை தாக்கும் காட்சி 
தேசிய செய்திகள்

உத்தராகண்ட்: காட்டு யானை மிதித்தும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நபர்!

யானையைக் கண்டதும் நிலைதடுமாறி கீழே விழுந்த அந்த நபரின் நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதியில், ஆக்ரோஷத்துடன் இருந்த யானை 2 முறை மிதித்தது.

டேராடூன்,

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வார் - டேராடூன் நெடுஞ்சாலையில், இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் மீது காட்டு யானை 2 முறை மிதித்தபோதிலும், அவர் எவ்வித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகாலை நேரத்தில் திடீர் தாக்குதல்

உத்தராகண்ட் மாநிலம் ராஜாஜி புலிகள் காப்பகத்தை ஒட்டிய வனப்பகுதி வழியாக ஹரித்வார் - டேராடூன் நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையில் உள்ள நேபாள பார்ம் அருகே இன்று (வியாழக்கிழமை) அதிகாலை சுமார் 4 மணியளவில், இருசக்கர வாகனத்தில் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று, திடீரென சாலையின் குறுக்கே வந்து அந்த நபரை வழிமறித்தது.

உயிர் தப்பிய அதிசயம்

யானையைக் கண்டதும் நிலைதடுமாறி கீழே விழுந்த அந்த நபரின் நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதியில், ஆக்ரோஷத்துடன் இருந்த யானை 2 முறை மிதித்தது. ஆனால், அடுத்த சில நொடிகளிலேயே அந்த யானை அங்கிருந்து அமைதியாக விலகிச் சென்றது. யானை சென்றவுடன், கீழே விழுந்து கிடந்த அந்த நபர் எவ்வித வெளிப்படையான காயங்களும் இன்றி உடனடியாக எழுந்து நின்றார்.

வைரலாகும் வீடியோவும் வனத்துறை எச்சரிக்கையும்

அவ்வழியாகச் சென்ற சிவா ஷர்மா என்ற கார் ஓட்டுநர் இந்த திகில் காட்சியைத் தனது செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த சாலையில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

SCROLL FOR NEXT