தேசிய செய்திகள்

உத்தராகண்ட்: வாகனத்தின் ரகசிய அறையில் பதுக்கி, கடத்திய ரூ.1.55 கோடி பணம் பறிமுதல்

இதுபற்றி வருமான வரி துறையினர் சார்பில் விசாரணை நடந்து வருகிறது.

டேராடூன்

உத்தராகண்ட் மாநிலத்தின் ராஜேந்திர நகர்-கவுலாகார் நகர் பகுதியில் ஆபரேசன் பிரஹார் என்ற பெயரின் கீழ் வருமான வரி துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில், மராட்டிய மாநில பதிவெண் கொண்ட வாகனம் ஒன்று வந்தது.

அதனை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், வாகனத்தின் ஒரு பகுதியில் ரகசிய அறை அமைத்து அதிக அளவில் பணம் பதுக்கி வைத்து இருந்துள்ளனர். அதுபற்றி விசாரித்தபோது, அவர்கள் சரியான பதிலை தெரிவிக்கவில்லை. அந்த பணத்திற்கான முறையான ஆவணங்கள், வாகனம் தொடர்பான ஆவணங்களும் அவர்களிடம் இல்லை என கூறப்படுகிறது.

அந்த பணத்தின் மதிப்பு ரூ.1.55 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. வாகனத்தில் இருந்த 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மராட்டிய பதிவெண் கொண்ட காரில், ரகசிய அறை அமைத்து அதில் பதுக்கி வைத்து கடத்தப்பட்ட பணம், உத்தராகண்டில் வைத்து பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பாக பார்க்கப்படுகிறது.

ஆயுதம், போதை பொருள் உள்ளிட்டவை கடத்தப்பட்டு கைப்பற்றப்படும் சூழலில் இதுபோன்று அதிக அளவில் சட்டவிரோத பணம் கடத்தப்படுவதும் அதிகரித்து காணப்படுகிறது. இதுபற்றி வருமான வரி துறையினர் சார்பில் விசாரணை நடந்து வருகிறது.