தேசிய செய்திகள்

பெரியார் சிலை உடைப்பு தமிழகத்தை அவமதிப்பது மட்டும் கிடையாது, தேசத்தையே அவமதிப்பது - காங்கிரஸ் தாக்கு

பெரியார் சிலை உடைப்பு தமிழகத்தை அவமதிப்பது மட்டும் கிடையாது, மொத்த தேசத்தையே அவமதிப்பது என காங்கிரஸ் கூறியது. #PeriyarStatue

புதுடெல்லி,

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் நேற்று இரவு பெரியார் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்விவகாரத்திற்கு காங்கிரஸ் கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் மல்லிகார்ஜுன கார்கே டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். கார்கே பேசுகையில், பாரதீய ஜனதா தொண்டர்கள் நாடு முழுவதும் குண்டர் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளார்கள். சமூக நீதிக்காக பணியாற்றிய பெரியாரின் சிலை உடைப்பு என்பது தமிழகத்தை அவமதிப்பது கிடையாது, மொத்த தேசத்தையே அவமதிப்பது. இதற்கு நாங்கள் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறோம். பெரியார் சமூக சீர்திருத்தவாதிகளின் சின்னங்கள் மீதான இதுபோன்ற தாக்குதல்களை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம், என கூறிஉள்ளார்.

இந்த சம்பவங்கள் அனைத்தும் பிற கொள்கைகள் மீதான பா.ஜனதாவின் சகிப்புத்தன்மை இல்லாமையை காட்டுகிறது எனவும் காங்கிரஸ் விமர்சனம் செய்து உள்ளது.

'ஜனநாயகம் என்பது பல சிந்தனையாளர்களும் ஒன்றுபடுவதற்கான இடமாகும். இருப்பினும், பா.ஜனதா பிறரது கொள்கைகளுக்கு எதிராக சகிப்புத்தன்மை இல்லாமையை காட்டிவருகிறது, என்ற மல்லிகார்ஜுன கார்கே, பாரதீய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்தியாவில் அவர்களுடைய கொள்கையை திணிக்க முயற்சி செய்துவருகிறது, அதற்கான செயல்களின் ஒருபகுதிதான் இந்த சிலை உடைப்பு தாக்குதல்களாகும் என கூறிஉள்ளார்.

SCROLL FOR NEXT