தேசிய செய்திகள்

‘வந்தே மாதரம்' பாடல் - புதிய விதிமுறைகளை வகுத்தது மத்திய அரசு

வந்தே மாதரம் பாடும் போது கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

தேசிய கீதத்தைப் பாடும்போது கடைபிடிக்க வேண்டிய விதிகள் சட்டப்பூர்வமாக வகுக்கப்பட்டுள்ளன. ஆனால், வந்தே மாதரம் பாடலைப் பாடும்போது அத்தகைய குறிப்பிட்ட சட்டப்பூர்வ விதிகள் ஏதும் இதுவரை இயற்றப்படவில்லை.

எனினும், இப்பாடல் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்ததாலும், நாட்டின் தேசபக்தியின் அடையாளமாக இருப்பதாலும், இப்பாடல் இசைக்கப்படும் போது குடிமக்கள் அதற்குரிய மரியாதையைத் தானாக முன்வந்து அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஏற்கனவே இது தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த நீதிமன்றங்கள், தேசியப் பாடலைப் பாடுவதைக் கட்டாயமாக்க முடியாது. ஆனால் அதற்குரிய கௌரவத்தைச் சிதைக்கும் வகையில் யாரும் செயல்படக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது.

இந்தநிலையில், 'வந்தே மாதரம்' பாடல் இசைப்பதற்கு புதிய விதிமுறைகளை வகுத்தது மத்திய உள்துறை அமைச்சகம். அதில்

* தேசியக் கொடி ஏற்றும் போது 'வந்தே மாதரம்' பாடல் இசைக்கப்பட வேண்டும்

*ஜனாதிபதி, கவர்னர் நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலும், முடிவிலும் 'வந்தே மாதரம்' பாடல் இசைக்கப்பட வேண்டும்

* ஜனாதிபதி மக்களிடம் உரையாற்றும் முன்பும், பின்பும் 'வந்தே மாதரம்' பாட வேண்டும்

* தேசியக் கொடியை பேரணியாக கொண்டு வரப்படும் போது 'வந்தே மாதரம்' பாட வேண்டும்

* 'வந்தே மாதரம்' பாடல் பாடும் போது எழுந்து நிற்க வேண்டும்

* அரசு நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் பாடுவதற்கு முன்பாக 'வந்தே மாதரம்' பாடல் இசைக்கப்பட வேண்டும்

* சினிமா தியேட்டர்களில் வந்தே மாதரம் இசைக்கப்பட வேண்டிய அவசியமில்லை.

* ஏற்கனவே தேசத்தின் மரியாதையை அவமதிப்பதைத் தடுக்கும் சட்டம் 1971 தேசிய கீதத்திற்கு மட்டுமே பொருந்தும் என்று கூறப்பட்டு உள்ளது.

* அரசியலமைப்பின் பிரிவு 51(ஏ) தேசிய கீதத்திற்கு மரியாதை காட்ட மக்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று கூறுகிறது.

* வந்தே மாதரம், தேசிய கீதம் இசைக்கப்படும் நிகழ்வில், வந்தே மாதரத்தை முதலில் இசைக்க வேண்டும்.

* தாய் நாட்டை லட்சுமி, சரஸ்வதி, துர்கையுடன் ஒப்பிடும் வரிகளும் இனி இசைக்கப்படும்.

* தேசிய பாடலான வந்தே மாதரத்தை அவமரியாதை செய்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்

* புதிய விதிகளின்படி 1937-ல் நீக்கப்பட்ட பக்திகள், வந்தே மாதரம் பாடலில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.

வங்கமொழிக் கவிஞர் பங்கிம் சந்திர சட்டர்ஜி கடந்த 1875 நவம்பர் 7-ம் தேதி 'வந்தே மாதரம்' பாடலை எழுதினார். இந்த பாடலுக்கு ரவீந்திரநாத் தாகூர் இசையமைத்தார். சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு இப்பாடல் மிகுந்த உத்வேகம் அளித்தது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, 1950 ஜனவரி 24-ம் தேதி இது தேசியப் பாடலாக அறிவிக்கப்பட்டது. வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் தற்போது அரசு விழாக்கள், பள்ளிகளில் இதனை பாட வழிகாட்டுதல்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.

வந்தே மாதரம் பாடலுக்கான புதிய வழிகாட்டுதல்கள் விவாதப்பொருளாக மாறியுள்ளது. ஏற்கனவே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசு 'வந்தே மாதரத்தை' ஒரு அரசியல் கருவியாகப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டி உள்ளது. வந்தே மாதரம் புதிய விதிகளுக்கு எதிராக மக்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கத்தில் ஈடுபட்டுள்ளன.

தமிழக சட்டமன்றத்தில் முதலில் பாடப்படுப்படுவது தமிழ்த்தாய் வாழ்த்தா..வந்தே மாதரமா.. என சந்தேகம் எழுந்துள்ளது.