தேசிய செய்திகள்

வந்தே மாதரம் பாடலை முதலில் பாடி சுதந்திர தினவிழாவை தொடங்க வேண்டும்; மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு

சுதந்திர தின விழா மற்றும் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வுகள் காலை 9 மணிக்கு மேல் தொடங்கப்பட வேண்டும்.

புதுடெல்லி

வந்தே மாதரம் பாடலை முதலில் பாடி சுதந்திர தினவிழாவை தொடங்க வேண்டும் என மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

டெல்லியில் விழா

நாடு முழுவதும் இன்று சுதந்திரதின விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, விழா எப்படி நடைபெற வேண்டும் என்பது தொடர்பாக அனைத்து மாநில தலைமை செயலாளர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகளுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு அனுப்பியுள்ளது.

அதில், டெல்லியில் செங்கோட்டையில் நடைபெறும் விழாவில் ஆயுதப்படைகள் மற்றும் டெல்லி காவல் துறையினரால் பிரதமருக்கு 'காவலர் மரியாதை அளித்தல், தேசியப்பாடல் பாடுதல், தேசியக்கொடியை ஏற்றிவைத்தல் (அப்போது தேசிய கீதம் இசைக்கப்படுதல் மற்றும் 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்துதல்) இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் மலர் தூவுதல், பிரதமரின் உரை, தொடர்ந்து தேசியப்பாடல் மற்றும் தேசிய கீதம் பாடுதல், இறுதியில் மூவர்ண பலூன்களை பறக்கவிடுதல் ஆகியவை நடைபெறும்.

மாநிலங்கள்

மாநில தலைநகரங்கள், மாவட்ட தலைமையகங்கள், உட்கோட்டங்கள், வட்டங்கள், கிராம ஊராட்சிகள் மற்றும் கிராமங்கள் போன்றவற்றில் சுதந்திர தின விழா மற்றும் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வுகள் காலை 9 மணிக்கு மேல் தொடங்கப்பட வேண்டும்.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேசியப்பாடல் பாடுதல், முதல்-அமைச்சரால் தேசியக்கொடி ஏற்றப்படுதல், அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைத்தல், மாநில காவல்துறை, துணை ராணுவப்படைகள், ஊர்க்காவல் படை, என்.சி.சி., சாரணப்படை ஆகியவற்றின் அணிவகுப்பு மரியாதை, முதல்-அமைச்சரின் உரை, அதனை தொடர்ந்து தேசியப்பாடல் மற்றும் தேசிய கீதம் பாடுதல் ஆகியவை நடைபெற வேண்டும்.

அமைச்சர் அல்லது கலெக்டர்

மாவட்ட அளவிலான விழாவில் தேசியப்பாடல் பாடுதல், தொடர்ந்து அமைச்சர் அல்லது கலெக்டர் மூலம் தேசியக்கொடி ஏற்றுதல், அதனை தொடர்ந்து தேசிய கீதம் இசைத்தல், பின்னர் அணிவகுப்பு நடத்துதல், அமைச்சர் அல்லது கலெக்டர் உரையாற்றுதல், இறுதியாக தேசியப்பாடல் மற்றும் தேசிய கீதம் பாடுதல் ஆகியவை நடைபெற வேண்டும்.

துணை கோட்ட அலுவலகங்கள் மற்றும் வட்டார அலுவலகங்களிலும் இப்படியே நடக்க வேண்டும். கோட்டாட்சியர் அல்லது வட்டார வளர்ச்சி அதிகாரி கொடியேற்ற வேண்டும்.

ஊராட்சித்தலைமையகம் மற்றும் கிராமங்களில் தேசியப்பாடல் பாடுதல், ஊராட்சித்தலைவர் மூலம் தேசியக்கொடி ஏற்றப்படுதல், தேசிய கீதம் பாடுதல், அதனைத்தொடர்ந்து ஊராட்சித்தலைவர் பொதுமக்களிடையே உரையாற்றுதல், இறுதியாக தேசியப்பாடல் மற்றும் தேசிய கீதம் பாடுதல் ஆகியவை வரிசையாக நடைபெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.