தேசிய செய்திகள்

ராகுல் காந்திக்கு எதிரான வழக்கில் மீண்டும் விசாரணை.. வாரணாசி கோர்ட்டு உத்தரவு

ராம பிரான் குறித்து சர்ச்சைகுறிய வகையில் கருத்து தெரிவித்ததாக ராகுல் காந்தி மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.

வாரணாசி,

அமெரிக்காவின் பாஸ்டனில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் கடந்த ஆண்டு உரை நிகழ்த்திய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ராம பிரான் ஒரு புராண மற்றும் கற்பனை பாத்திரம் எனக்கூறினார்.

அவரது இந்த கருத்தை எதிர்த்து வாரணாசியில் உள்ள கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த கோர்ட்டு, ராகுல் காந்தி வெளியிட்ட கருத்துகள் வெளிநாட்டில் என்பதால் அவர் மீது புகார் செய்வதற்கு மத்திய அரசின் அனுமதி தேவை எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து வாரணாசியில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி யஜுர்வேத் விக்ரம்சிங், ராகுல் காந்தி மீதான வழக்கில் புதிதாக விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

ராகுல் காந்திக்கு எதிராக வழக்கு பதிவு செய்யவோ அல்லது விசாரிக்கவோ தற்போதைய நிலையில் மத்திய அரசின் முன்அனுமதி தேவை இல்லை எனக்கூறிய நீதிபதி, இந்த வழக்கை மறுவிசாரணை செய்து, உண்மைகள் மற்றும் பொருந்தக்கூடிய சட்டத்துக்கு இணங்க உத்தரவைப் பிறப்பிக்குமாறு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து ராகுல்காந்திக்கு எதிரான இந்த வழக்கு மீண்டும் புதிதாக மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விசாரிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.