தேசிய செய்திகள்

பிரிக்ஸ் விருந்தில் பரிமாறப்பட்ட சைவ உணவுகள்; விமர்சித்த காங்கிரஸ் கட்சிக்கு பா.ஜ.க. பதிலடி

ஆக்கபூர்வமான கருத்துகளை முன்வைக்கும் திறன் காங்கிரஸ் கட்சிக்கு இல்லை என பா.ஜ.க. விமர்சித்துள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் சமீபத்தில் நடந்து முடிந்த பிரிக்ஸ் உச்சிமாநாட்டின்போது, அங்கு வந்திருந்த பல்வேறு நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகளுக்கு விருந்து வழங்கப்பட்டது. அந்த விருந்துக்கான உணவுப் பட்டியலில் சைவ உணவுகளே முழுவதுமாக இடம்பெற்றிருந்தது குறித்து காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்தது. பா.ஜ.க. அரசு தனது உணவு பழக்கத்தை உலக நாடுகளில் இருந்து வந்த விருந்தினர்கள் மீது திணித்ததாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது.

மேலும் ராகுல் காந்தி வெளியிட்ட பதிவு ஒன்றில், பிரிக்ஸ் விருந்து குறித்து நேரடியாகக் குறிப்பிடாமல், 80 சதவீத இந்தியர்கள் அசைவ உணவு உண்பவர்கள் என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் விருந்தில் வழங்கப்பட்ட உணவு குறித்து காங்கிரஸ் கட்சியின் விமர்சனத்திற்கு பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி, “பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் டெல்லியில் நடைபெற்ற 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாடு இந்தியாவின் குறிப்பிடத்தக்க ராஜதந்திர வெற்றியாகும். இந்தியா பெற்ற வெற்றிகளை கொண்டாடுவதற்கு பதிலாக, உணவுப் பட்டியல் மீது காங்கிரஸ் கவனம் செலுத்துகிறது.

முக்கியமான விவகாரங்கள் குறித்து ஆக்கபூர்வமான கருத்துகளை முன்வைக்கும் திறன் அவர்களுக்கு இல்லை. அவர்கள் உண்மையில் எதற்கெடுத்தாலும் அதிருப்தி கொள்ளும் நபரைப் போல் நடந்து கொள்கிறார்கள்” என்று விமர்சித்தார்.

SCROLL FOR NEXT