தேசிய செய்திகள்

வெனிசுலா இடைக்கால ஜனாதிபதி இன்று இந்தியா வருகை

மும்பையில், இந்திய எரிசக்தி தொழில் துறை தலைவர்களையும், செயலதிகாரிகளையும் டெல்சி சந்தித்து பேசுவார் என்று இந்திய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதுடெல்லி

வெனிசுலா நாட்டின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிகீஸ் இன்று இந்தியாவுக்கு வருகை தருகிறார். இந்தியாவில், இன்று தொடங்கி 7-ந்தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர் இரு நாடுகளுக்கு இடையேயான எரிசக்தி, வர்த்தகம், முதலீடு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட துறை சார்ந்த விசயங்களை பற்றி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ ஒரு போதை பொருள் பயங்கரவாதி என்று கடந்த ஜனவரியில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறினார். அமெரிக்காவுக்குள் அபாயகர போதை பொருட்கள் கடத்தப்படுகின்றன என்றும் கூறினார்.

இதனையடுத்து, நிக்கோலஸ் மதுரோவும், அவருடைய மனைவி சிலியா புளோரசும் அமெரிக்க ராணுவ வீரர்களால் கைது செய்யப்பட்டு வெனிசுலாவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர். இதற்கு ரஷியா, ஈரான் மற்றும் சீனா போன்ற நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்திய அரசும் இதற்கு கவலை தெரிவித்தது. நிலைமையை கவனித்து வருவதுடன், வெனிசுலா மக்களின் நலனுக்கான ஆதரவை மீண்டும் வலியுறுத்துகிறோம் என்றும் தெரிவித்தது. இந்த சூழலில், டெல்சி அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதியானார். அவர் அமெரிக்காவுடன் சுமுக அணுகுமுறையை கையாண்டு வருகிறார்.

இந்த சூழலில், கடந்த பிப்ரவரியில் அமெரிக்கா சில தளர்வுகளை ஏற்படுத்தியது. இதன்பின்னர், அந்நாட்டிடம் இருந்தும் இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. கடந்த மே மாதத்தில் வெனிசுலாவிடம் இருந்து அதிகம் எண்ணெய் இறக்குமதி செய்த 2-வது நாடாக இந்தியா உள்ளது.

டெல்சியின் இந்த பயணத்தில், பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அப்போது, எரிசக்தி, வர்த்தகம், முதலீடு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மருந்து பொருட்கள், சுகாதார நலன், போக்குவரத்து உள்ளிட்ட துறை சார்ந்த விசயங்களை பற்றியும் ஆலோசிக்க உள்ளார்.

இதேபோன்று மும்பையில், இந்திய எரிசக்தி தொழில் துறை தலைவர்களையும், செயலதிகாரிகளையும் டெல்சி சந்தித்து பேசுவார் என்று இந்திய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடைசியாக, கடந்த ஆண்டு பிப்ரவரியில் எண்ணெய் துறை மந்திரியாக டெல்சி ரோட்ரிகீஸ் இருந்தபோது, அவருடைய தலைமையிலான குழுவினர் இந்தியாவுக்கு வருகை தந்தனர். அப்போது, இந்திய எரிசக்தி வார மாநாட்டில் அவர்கள் பங்கேற்றனர்.