தேசிய செய்திகள்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

புதுடெல்லி,

தமிழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின்போது, கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் கட்சியின் அப்போதைய பொருளாளராக இருந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி போட்டியிட்டார்.

இந்த தேர்தலில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றார். தேர்தல் ஆணையம் நிர்ணயித்த தொகைக்கு அதிகமாக மு.க.ஸ்டாலின் செலவு செய்ததுடன், அதிகார துஷ்பிரயோகத்திலும் ஈடுபட்டதாக குற்றம் சாட்டிய சைதை துரைசாமி, கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றது செல்லும் என 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் தீர்ப்பு வழங் கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து சைதை துரைசாமி, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மேல்முறையீட்டு மனு மீதான இறுதி விசாரணை நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, விஜய் விஷ்னோய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வந்தது. இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.