குர்தால் ,
79 ஆண்டுகளுக்கு பிறகு கிராமத்திற்கு வந்த அரசு பேருந்தை பூக்கள் தூவி, மேளதாளத்துடன் மக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
ராஜஸ்தான் மாநிலத்தின் குர்தால் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு, சாதாரண விஷயம் ஒன்று வாழ்நாள் கொண்டாட்டமாக மாறியுள்ளது. சுதந்திரம் அடைந்து சுமார் 79 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல்முறையாக தங்கள் கிராமத்திற்கு வந்த அரசு பேருந்தை மக்கள் பூக்கள், மேளதாளங்கள், ஆரத்தி மற்றும் நடனத்துடன் உற்சாகமாக வரவேற்றனர்.
மழை பெய்த போதிலும், நீண்ட நாட்களாக எதிர்பார்த்த அரசு பேருந்து சேவையை வரவேற்க மக்கள் வீதியின் இருபுறமும் திரண்டனர். பேருந்து கிராமத்திற்குள் நுழைந்ததும், சாலையின் இருபுறமும் திரண்டிருந்த கிராம மக்கள் அதன் மீது பூக்களைத் தூவியும், பட்டாசுகளை வெடித்தும், மேளதாளத்திற்கு ஏற்ப நடனமாடியும், ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர்.
சுதந்திரத்திற்கு பிறகு தங்கள் கிராமத்திற்கு நேரடியாக வரும் முதல் அரசு பேருந்து இதுவே என்று கிராம மக்கள் தெரிவித்தனர். ராஜஸ்தானின் கேக்ரி (Kekri) பகுதியில் அமைந்துள்ள குர்தால் மற்றும் அதன் அருகிலுள்ள கேரோட் (Kerot) ஆகிய கிராமங்கள் பல தசாப்தங்களாக அரசு பேருந்து இணைப்பு வசதி இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.