தேசிய செய்திகள்

‘வீடியோ கேம்’ விளையாடி இருப்பார்கள்: துல்லிய தாக்குதல் நடத்தியதாக காங்கிரஸ் சொல்வது பொய் - பிரதமர் மோடி பேச்சு

காங்கிரஸ் ஆட்சியில் துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டதாக காங்கிரஸ் சொல்வது பொய் என்று பிரதமர் மோடி கூறினார்.

சிகார்,

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில், 6 தடவை துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டதாக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ராஜீவ் சுக்லா கூறியுள்ளார்.

இந்நிலையில், நேற்று ராஜஸ்தான் மாநிலம் சிகாரில் நடைபெற்ற பா.ஜனதா தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி அதை நிராகரித்தார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

4 மாதங்களுக்கு முன்பு, ஒரு காங்கிரஸ் தலைவர், தங்களது ஆட்சியில் 3 தடவை துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறினார். தற்போது, மற்றொரு தலைவர் 6 தடவை துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறுகிறார். தேர்தல் முடிவதற்குள், இந்த எண்ணிக்கை 600 ஆக உயர்ந்தாலும் உயரும்.

அவர்கள் காகிதத்தில்தான் துல்லிய தாக்குதல் நடத்தினர். அதனால் என்ன பயன்?

பா.ஜனதா ஆட்சியில் துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டபோது, அதை காங்கிரஸ் தலைவர்கள் முதலில் கேலி செய்தனர். பிறகு நிராகரித்தனர். பின்னர், எதிர்த்தனர். தற்போது, நாங்களும் தாக்குதல் நடத்தினோம் என்று கூறுகிறார்கள். அவர்கள் சொல்வது எல்லாமே பொய்.

இந்த தலைவர்கள் வீடியோ கேம் விளையாடுவார்கள் என்று நினைக்கிறேன். அதில், துல்லிய தாக்குதலை ரசித்தவர்கள், அதை ஒருவகை விளையாட்டு என்று கருதி விட்டார்கள் போலும்.

ராணுவ தளபதியை குண்டர் என்றும், விமானப்படை தளபதியை பொய்யர் என்றும் சொன்னவர்கள்தான், காங்கிரஸ் தலைவர்கள். ராணுவத்தின் துணிச்சலை அவர்கள் நம்புவது இல்லை. பலியான பயங்கரவாதிகள் எண்ணிக்கை குறித்து சந்தேகம் எழுப்புவார்கள். ஏன், பயங்கரவாதிகளை புதைக்க சவப்பெட்டி அனுப்பப்போகிறார்களா?

இரண்டு வேளை உணவுக்கு கூட வழி இல்லாதவர்கள்தான் ராணுவத்தில் வேலைக்கு முயற்சிக்கிறார்கள் என்று கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி பேசியுள்ளார். இது, நமது துணிச்சலான ராணுவ வீரர்களையும், அவர்களுடைய குடும்பத்தினரையும் அவமதிக்கும் செயல்.

காங்கிரஸ் கட்சி மவுனமாக இருப்பது, அந்த கூற்றை ஆதரிப்பது போல் உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்