மும்பை,
மராத்தி தெரியாததால் ஆட்டோவுடன் டிரைவர்கள் ரெயிலில் சொந்த ஊர் செல்வதாக வீடியோ பரவி வருகிறது. ஆனால் இந்த வீடியோ உண்மையில்லை என மத்திய ரெயில்வே விளக்கம் அளித்து உள்ளது.
மராட்டியத்தில் ஆட்டோ, டாக்சி மற்றும் செயலிகள் மூலம் இயக்கப்படும் வாகன டிரைவர்கள் அடிப்படை மராத்தி மொழி பேசுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மராத்தி தெரியாத டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் 2 நாட்களில் மராத்தி தெரியாத 2 ஆயிரத்து 767 டிரைவர்களுக்கு ஆர்.டி.ஒ. அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.
இந்தநிலையில் டிரைவர் ஒருவர் தனது ஆட்டோவை எக்ஸ்பிரஸ் ரெயிலின் சரக்கு பெட்டியில் ஏற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. அந்த வீடியோவின் பின்னணியில் பேசும் நபர், வெளிமாநில டிரைவர் மராத்தி கற்றுக்கொள்ள பயந்து சொந்த ஊருக்கு தப்பி செல்வதாக குறிப்பிட்டு இருந்தார்.
ஆனால் இந்த வீடியோவில் உண்மையில்லை என மத்திய ரெயில்வே தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து மத்திய ரெயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி சொப்னில் நிலா கூறுகையில், "சமூக வலைதளத்தில் பரவும் வீடியோவில் உள்ள ரெயில் எல்.டி.டி. - பனாரஸ் இடையே இயக்கப்பட்ட கோடைகால சிறப்பு ரெயில்.
அந்த ரெயில் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரை மட்டுமே இயக்கப்பட்டது. எனவே மராத்தி தெரி யாத டிரைவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைக்கும். இந்த வீடியோவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது உறுதியாகி உள்ளது” என்றார்.