முதல்-அமைச்சர் விஜய் கடந்த மாதம் 27-ந்தேதி முதல்முறையாக டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது தமிழ்நாட்டுக்கு தேவையான திட்டங்கள், நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். பின்னர் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்துக்கு தர வேண்டிய நிலுவை நிதி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுகோள் விடுத்தார். இந்த நிலையில் 2-வது முறையாக முதல்-அமைச்சர் விஜய் இன்று காலையில் தனி விமானம் மூலம் டெல்லி சென்றார்.
டெல்லியில் நாளை (11-ந்தேதி) பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுகிறது. அனைத்து மாநில முதல்-மந்திரிகளும் கலந்து கொண்டு பேசும் இந்த கூட்டத்தில், தமிழக முதல்-அமைச்சர் விஜய் தமிழகத்திற்கு தேவையான நிதியை ஒதுக்குமாறு வலியுறுத்தி பேச உள்ளார். இந்த கூட்டத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர். கூட்டம் முடிந்ததும் அங்கேயே பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா உள்ளிட்டோரையும் முதல்-அமைச்சர் விஜய் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லியில் இன்று ஜனாதிபதி திரௌபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோரையும் முதல்-அமைச்சர் விஜய் சந்திக்க திட்டமிட்டு இருந்தார்.இதற்காக இரு தலைவர்களிடமும் விஜய்தரப்பில் இருந்து. நேரம் கோரப்பட்டுஇருந்தது. நேரம் கிடைத்ததையடுத்து, ஜனாதிபதி திரவுபதி முர்முவை விஜய் சந்தித்தார். இதையடுத்து துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணனையும் சந்தித்தார். இரு தலைவர்களையும் மரியாதை நிமித்தமாக விஜய் சந்தித்துள்ளார்.