தேசிய செய்திகள்

தீமையை நன்மை வெற்றி கொண்டதற்கான கொண்டாட்டமே விஜயதசமி திருவிழா: பிரதமர் மோடி பேச்சு

ஏழைகள் மற்றும் விளிம்பு நிலையில் உள்ளவர்களுக்கு சேவை செய்வது என்பதே நம்முடைய உச்சபட்ச முன்னுரிமையாக உள்ளது என்றார்.

புதுடெல்லி

தீமையை நன்மை வெற்றி கொண்டதற்கான கொண்டாட்டமே விஜயதசமி திருவிழா என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

நாடு முழுவதும் ஆயுத பூஜை நேற்று கொண்டாடப்பட்டது. இன்று விஜயதசமி கொண்டாடப்பட்டு வருகிறது. தசரா திருவிழா என்றும் அழைக்கப்படும் இந்த நிகழ்வில், ராவணன் உருவபொம்மை எரிக்கப்படும். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கிழக்கு டெல்லியில் உள்ள இந்திரபிரஸ்தா ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற விஜயதசமி கொண்டாட்டங்களில் இன்று பங்கேற்றார்.

உருவ பொம்மைகள் எரிப்பு

அப்போது அவருக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு நடந்த தசரா கொண்டாட்டத்தில் அவர் கலந்து கொண்டார். பூஜையிலும் ஈடுபட்டார். இதன்பின்பு, அந்த நிகழ்வில் ராவணன், கும்பகர்ணன் மற்றும் மேகநாத் உள்ளிட்டோரின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன.

நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, தீமையை நன்மை வெற்றி கொண்டதற்கான கொண்டாட்டமே விஜயதசமி திருவிழா. உண்மை மற்றும் நேர்மையின் நீடித்த வலிமையை நமக்கு இது நினைவுப்படுத்துகின்றது என்று கூறினார். வேற்றுமையில் இருந்து விடுபட்ட, பாரபட்சமற்ற, நீதியை வழங்க கூடிய, ஒவ்வொருவருக்கும் சம வாய்ப்புகள் கிடைக்க கூடிய நிர்வாக நடைமுறையை கொண்டது ராமராஜ்ஜியம்.

மக்கள் நலன்

அதில், அதிகாரத்துவம் ஆட்சி செலுத்துகிறது என்றில்லாமல், மக்கள் நலன் உறுதி செய்யப்படும் என்றார். அதனால், ஏழைகள் மற்றும் விளிம்பு நிலையில் உள்ளவர்களுக்கு சேவை செய்வது என்பதே நம்முடைய உச்சபட்ச முன்னுரிமையாக உள்ளது என்றார். நாம் வளர்ச்சியடைந்த பாரதம் மற்றும் ஆத்மநிர்பார் பாரதம் என்ற இலக்குகளை நம்முன் நிறுத்தி செயல்பட வேண்டும் என்றும் பேசியுள்ளார்.

SCROLL FOR NEXT