தேசிய செய்திகள்

மழை வேண்டி கழுதைகள், தவளைகளுக்கு திருமணம்... கிராம மக்கள் நூதன வழிபாடு

மழை பொய்த்துப் போனதால் பயிர்கள் கருகி வருகின்றன.

பெங்களூரு,

மழை வேண்டி...

கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் நவலகுந்து தாலுகாவில் சிரூர் கிராமம் அமைந்துள்ளது. தற்போது மழை பொய்த்துப் போனதால் கிராமத்தில் விவசாயிகள் சாகுபடி செய்த பயிர்கள் கருகி வருகின்றன. எனவே கிராம மக்கள் மழை வேண்டி ஒரு ஜோடி கழுதை, ஒரு ஜோடி தவளைக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

இதற்காக திருமண வரவேற்பு பேனரும் அடித்து கிராமத்தில் வைத்து இருந்தனர். இந்த நிலையில் திட்டமிட்டப்படி நேற்று மழை வேண்டி கழுதைகளுக்கும், தவளைகளுக்கும் திருமணம் நடந்தது. இதையொட்டி கிராம மக்கள் மணமகன் வீட்டார், மணமகள் வீட்டார் என 2 குழுவாக பிரிந்து செயல்பட்டனர். இதில் ஆண் கழுதைக்கு காந்தேஷ் என்றும், பெண் கழுதைக்கு கஸ்தூரி என்றும் பெயரிடப்பட்டது.

ஒரு ஜோடி கழுதை, ஒரு ஜோடி தவளை...

பின்னர் ஆண் கழுதையும், பெண் கழுதையும் மாலை அணிவித்து அலங்கரித்து ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டது. அதுபோல் ஆண், பெண் தவளைகளும் அலங்கரித்து எடுத்துச் செல்லப்பட்டது. இந்த ஊர்வலம் அப்பகுதியில் உள்ள கோவில் முன்பு வந்தடைந்தது. பின்னர் அங்கு வைத்து கழுதைகளுக்கும், தவளைகளுக்கும் கெட்டிமேளம், வேத மந்திரங்கள் முழங்க திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

அப்போது கிராம மக்கள், மணமக்களுக்கு அட்சதை தூவி ஆசி வழங்குவது போல், கழுதைகள், தவளைகளுக்கும் அட்சதை தூவினர். மேலும் அவர்கள் மழை பெய்து விவசாயம் செழிக்க வருண பகவானை வேண்டி சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். அதையடுத்து கழுதைகளுக்கு உணவு பரிமாறப்பட்டது. திருமணத்தில் பங்கேற்றவர்களுக்கு உணவு விருந்து நடந்தது. இதில் கிராம மக்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.