தேசிய செய்திகள்

மேற்கு வங்காளத்தில் வன்முறை; திரிணாமுல் காங்கிரசின் அலுவலகம் சூறையாடல்

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தின்ஹடா டவுன் பகுதியின் தலைவரை பா.ஜ.க.வின் ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் சேர்ந்து தாக்கினர்.

ஹவுரா

மேற்கு வங்காளத்தின் பதவிக்காலம் மே 7-ந்தேதியுடன் முடிவடைய உள்ள சூழலில், மேற்கு வங்காளத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதன்படி, ஏப்ரல் 23-ந்தேதி முதல் கட்ட தேர்தலும், 29-ந்தேதி 2-ம் கட்ட தேர்தலும் நடத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும், பா.ஜ.க. தொண்டர்களுக்கும் இடையே இன்று மோதல் ஏற்பட்டது. இதன் ஒரு பகுதியாக பல பகுதிகளில் வன்முறை வெடித்தது.

மேற்கு வங்காளத்தின் ஹவுரா நகரில் துமுர்ஜலா பகுதியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் சூறையாடப்பட்டு உள்ளது. அதன் ஜன்னல்கள் உடைக்கப்பட்டு உள்ளன. போஸ்டர்கள் கிழிக்கப்பட்டு உள்ளன. நாற்காலிகள் தூக்கி வீசப்பட்டன. அக்கட்சியின் கொடி தெருவில் தூக்கி வீசப்பட்டது.

இதேபோன்று, கூச் பெஹார் பகுதியிலும் தாக்குதல் நடந்தது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தின்ஹடா டவுன் பகுதியின் தலைவர் பிஷு தார் என்பவரை பா.ஜ.க.வின் ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் சேர்ந்து வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே தாக்கினர்.

இதுபற்றி அவர் கூறும்போது, அவர்கள் எங்களை தாக்குவார்கள் என்று தெரியும். ஆனாலும், துணிச்சலுடன் நாங்கள் முன்னேறினோம். நான் முன்னே நடந்தேன். இதுவே பா.ஜ.க.வின் கலாசாரம் என்று கூறினார். இந்த தேர்தலில், பா.ஜ.க. 106 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 100 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

ஆனால், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியோ, 44 தொகுதிகளையே கைப்பற்றி உள்ளது. 37 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதனால், மேற்கு வங்காளத்தில் முதன்முறையாக பா.ஜ.க. ஆட்சியமைக்க உள்ளது.